Thursday, July 22, 2010

''1947''----------------- ச.தமிழ்ச்செல்வன்

கொண்டாட்டங்கள்...கொடியேற்றம்...என்று தேசம் விடுதலையை கொண்டாடிய ஆண்டு. இருட்டிலே வாங்கினோம் என்று பின்னர் நம்மில் பலரும் கேலி பேசினாலும், வாஸ்கோடகாமா 1498ஆம் ஆண்டு கால் வைத்த நாள் துவங்கிய கொடுமைகளும் வேதனைகளும், போராட்டங்களும் அரசியல் அரங்கிலேனும் ஒரு முடிவுக்கு வந்ததே என மக்கள் கொண்டாடினர்.

ஆனால் 1947 என்பது விடுதலையின் ஆண்டு மட்டுமல்ல.

இந்தியா என்கிற ஒரு தேசம் இந்தியா பாகிஸ்தான் என இரண்டாக்கப்பட்டது. மத்தியும் தெற்கும் கொண்டாட்டத்திலிருந்த நாட்களில் மேற்கிலும் கிழக்கிலும் வடக்கின் பல பகுதிகளிலும் பிரிவினையின் அர்த்தத்தை கோடான கோடி மக்கள் வர்ணிக்க முடியாத துயரங்களுடனும் இழப்புகளுடனும் உள்வாங்கிக் கொண்டிருந்தனர்.

பிரிவினைக்குக் காரணம் முஸ்லீம் லீக்தான் என்று ஒரு சாரரும் ஜின்னாதான் என்று சிலரும் காங்கிரஸ்தான் என்று ஒரு சாராரும் காலம் காலமாக சாதி இந்துக்கள் இஸ்லாமியரை தீண்டத்தகாதவராக நடத்தியதுதான் காரணம் என்று பலரும் இதெல்லாம் தவறு, விடுதலைக்குப்பிறகு வேலைவாய்ப்பு மற்றும் அதிகாரத்தில் பங்கு பற்றிய அச்சம் கொண்டிருந்த இஸ்லாமிய உயர் மத்தியவர்க்கமும் செல்வந்தரும்தான் பிரிவினைக்கு வித்திட்டனர் என்று ஒரு வாதமும் எல்லாவற்றுக்கும் மேலாக பிரிட்டீஷ் ஆட்சியாளன்ன் பிரித்தாளும் சூழ்ச்சியும் தாங்கள் போன பிறகு இந்தியர்கள் தமக்குள் வெட்டிக்கொண்டு சாகட்டும் என்கிற அவர்களின் நல்லெண்ணமும் தான் காரணம் என ஒரு வாதமும் என தேசமெங்கும் வாதப் பிரதிவாதங்கள் நடந்து கொண்டிருக்க அறுவைச் சிகிச்சை நடந்து முடிந்தது.

IndiaPakisatanஆனால் மக்களில் ஒரு பகுதியினர் வேறு விதமாகவும் நினைத்தனர். இந்து முஸ்லீம் கலவரங்கள் இத்தோடு ஒழிந்துவிடுமல்லவா? முஸ்லீம்களுக்கே உரியதாக தனியாக ஒரு நாடு என்று கொடுத்துவிட்டோம். இத்தோடு பகைமையின் கதை முடிந்தது என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

ஆனால் பகைமையின் வேர்கள் இன்னமும் ஆழமாக இரு நாட்டு மண்ணிலும் ஊடுருவி நின்று வருங் காலத்திலும் தொடர தேசப்பிரிவினை மேலும் ஒரு காரணமாகிவிட்டதை அவர்கள் அன்று அறிந்திருக்கவில்லை.

இன்றுவரை தொடர்ந்து நம் மீது கருநிழல் கவிழ்க்கும் மிகப் பெரிய சரித்திர நிகழ்வாக பிரிவினை இருந்து வருகிறது.

தமிழர்களாகிய நம்மால் அதிலும் இன்று வாழ்கிற நம்மால் தேசப்பிரிவினை உணர்ந்து கொள்ளப்படவில்லை. இன்றைய வகுப்புவாதப் பிரச்சினைகளை புன்ந்து கொள்ள தேசப்பிரிவினை பற்றிய ஒரு மீள்பார்வை நமக்கு அவசியம்.

1947 ஜூன் 3 அன்று இரண்டு நாடுகளாக இந்தியாவைப் பிரிக்கும் திட்டத்தை பிரிட்டீஷ் அரசு அறிவித்தது. அப்போது இந்தியாவில் இடைக்கால அரசு ஆட்சியில் இருந்தது. அந்த அரசு ஒரு "பிரிவினை கமிட்டி'யை நியமித்தது. கவர்னர் ஜெனரல் தலைமையில் சர்தார் வல்லபாய் படேல், டாக்டர் ராஜேந்திர பிரசாத், திரு.லியாகத் அலிகான் மற்றும் சர்தார் அப்துர் ரப் நிஷ்தர் ஆகியோரைக் கொண்டு அக்குழு இயங்கியது.

ஜூன் 18, 1947ல் பிரிட்டீஷ் பாராளுமன்றம் இந்திய விடுதலை மசோதாவையும் பிரிவினை மசோதாவையும் நிறைவேற்றியது. மூன்றே அனுபந்தங்களையும் 20 பிரிவுகளையும் மட்டுமே கொண்ட அந்த மசோதா தேசப்பிரிவினையை அமுல்படுத்த பத்து நிபுணர் குழுக்களை நியமித்தது அவை:

1. அமைப்பு, ஆவணங்கள், அரசு அலுவலர்
2. சொத்துக்கள் மற்றும் கடன்கள்
3. மத்திய வருவாய்
4. ஒப்பந்தங்கள்
5. கரன்சி, நாணயம் மற்றும் பரிவர்த்தனை
6. பொருளாதார உறவுகள்குழு 1
7. பொருளாதார உறவுகள்குழு 2
8. வாழுமிடம்
9. வெளியுறவு
10. ராணுவம்

இந்த நிபுணர்குழு எதுவும் இடம் பெயர்ந்த மக்களின் துயரத்தையோ நடைபெற்ற கலவரங்களையோ பற்றி கவனிக்கவேயில்லை.

1947 ஜூன் 30 அன்று "எல்லைக் குழு' (Boundary Commission) நியமிக்கப்பட்டது. பஞ்சாப் பவுண்டரி கமிஷன், பெங்கால் பவுண்டரி கமிஷன் என இரு குழுக்கள்.

இரண்டு குழுக்களுக்கும் தலைவராக சர். சின்ல் ரேட்கிளிஃப்(Sri Cyril Radcliff) என்ற பிரிட்டீஷ் சட்ட வல்லுநர் நியமிக்கப்பட்டார்.

பஞ்சாப் பவுண்டரி கமிஷன்:

1. சர்சின்ல் ரேட்கிளிஃப்
2. ஜஸ்டிஸ் தீன் மொகம்மது
3. ஜஸ்டிஸ் முகமது முனிர்
4. ஜஸ்டிஸ் மெகர்சந்த் மகாஜன்
5. ஜஸ்டிஸ் தேஜாசிங்

வங்காள பவுண்டரி கமிஷன்:

1. சர் சின்ல் ரேட் கிளிஃப்
2. ஜஸ்டிஸ் பி.கே. முகர்ஜி
3. ஜஸ்டிஸ் சி.சி. பிஸ்பாஸ்
4. ஜஸ்டிஸ் அபு சலேஷ் முகமது அக்ரம்
5. ஜஸ்டிஸ் எஸ். ஏ. ரஹ்மான்

ஒவ்வொரு குழுவிலும் இரண்டு இந்துக்கள் இரண்டு முஸ்லீம்கள் ஆனால் எல்லோரும் நீதிபதிகள். சாதாரண மக்களிலிருந்தோ இயக்கங்களிலிருந்தோ எவருமில்லை என்பதை கவனிக்க வேண்டும்.

பொதுமக்களிடமிருந்து பிரிவினை குறித்த மனுக்களை இக்கமிஷன்கள் வரவேற்றன. காங்கிரஸ் கட்சி, முஸ்லீம் லீக், இந்து மகாசபை, மற்றும் சீக்கிய அமைப்புகளும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட வாதங்களை இக்கமிஷன்களிடம் முன்வைத்தன. ஆனால் பெரும்பான்மையினரான படிப்பறிவற்ற இந்திய மக்களிடம் எவரும் கருத்து கேட்கவில்லை.

இரண்டு கமிஷன்களில் இருந்த உறுப்பினர்களுக்கு இடையிலும் தீர்க்கவே முடியாத கருத்து முரண்பாடுகள் நிலவின. வேறுவழியின்றி சட்டப்படி எது சரியோ அதைச் செய்ய கமிஷனின் தலைவர் சர் சின்ல் ரேட்கிளிப்புக்கு கமிஷன் உறுப்பினர்கள் அதிகாரம் வழங்கினர்.

1947 ஆகஸ்டு 17 அன்று சர்சின்ல் ரேட்கிளிஃப் தனது தீர்ப்பை வழங்கினார்.

இரண்டு தரப்புக்கும் திருப்தி தராத தீர்ப்பாக அது அமைந்தது.

ஆகஸ்டு 17 அன்று இரு நாட்டுப் பிரதமர்களும் அம்பாலாவில் சந்தித்து மக்களை (இந்துக்களையும் சீக்கியர்களையும் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கும் முஸ்லீம்களை இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கும்) பரிமாறிக் கொள்ள ஒப்புக் கொண்டனர்.

ஆனால் அந்தத் தேதிக்கு முன்பாகவே இங்கிருந்து 5 லட்சம் மக்களும் அங்கிருந்து 5 லட்சத்துக்கு மேலான மக்களும் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்தபடி இடம் பெயர்ந்துவிட்டிருந்தனர் என்பதுதான் சரித்திரத்தின் குரூர நகைச்சுவையாகும்.

இடம்பெயர்தல்:

நடுவில் கோடுகிழித்து இரண்டு தேசமாக்கிவிட்டால் வகுப்புவாத அரசியல் அன்றோடு முடிவுக்கு வந்துவிடும் என்று நியாய உணர்வுள்ள பலரும் கருதினர். லட்சோப லட்சம் மக்கள் இப்படி இடம் பெயர நேரிடும் என காந்திஜிகூட நினைக்க வில்லை. ஆனால் நவகாளியிலும் ராவல்பிண்டியிலும் 1946 இறுதியிலிருந்து நடைபெற்று வந்த கலவரங்கள் மக்களை வேறுவிதமாக நினைக்கச் செய்தன.

ஆனால் பிரிவினை பற்றிய பேச்சு மக்களிடம் புழங்க ஆரம்பித்த காலத்தில் மக்களும் அப்படித்தான் நினைத்தனர்.


India2pak-train
ராஜேந்திரசிங் (மூன்று சக்கரவாகன ஓட்டுநர், டெல்லி) அளித்த பேட்டியில் கூறினார்.

''அரசர்களும், அரசியல்வாதிகளும் தலைவர்களும் எப்பவுமே அதிகாரத்துக்காக போராடுவது வழக்கம் தான். அரசர்களும் தலைவர்களும் மாறிக்கொண்டே இருந்ததுதானே நமது சரித்திரம். ஆனால் மக்கள் எப்போது மாறினார்கள்? (ராஜே மகராஜே பதல்தே ரஹத்தே ஹை பர் ப்ரஜா கப் பத்லி ஹை?)''

பஞ்சாப் மக்களும் இப்படித்தான் பேசிக்கொண்டார்கள். ராஜா ரஞ்சித்சிங் ஆட்சிக்கு வந்தார். மக்கள் இடம் பெயரவில்லை. சீக்கியர்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வந்தனர். அப்போதும் மக்கள் இடம் பெயரவில்லை. ஆங்கிலேயர் ஆட்சிக்கு வந்தனர். அப்போதும் மக்கள் எங்கும் துரத்தப்படவில்லையே. எனவே அப்படி ஒன்றும் நடக்காது என்றுதான் சாதாரண மக்களும் நம்பிக் கொண்டிருந்தனர்.

ஆனால் நடந்து கொண்டிருந்த நிகழ்ச்சிப் போக்குகளை கவனித்த படித்த வர்க்கம் இதை முன்கூட்டியே உணர்ந்தது. காங்கிரஸ் கட்சி அலுவலகங்களுக்கு எண்ணற்ற கடிதங்கள் வந்து குவிந்தன. அன்று காங்கிரசிலிருந்த 14.5.1947 தேதியிட்டு கிருபளானி அவர்களுக்கு வந்த ஒரு கடிதம்:

""பஞ்சாபில் இருக்கும் சிறுபான்மையினரான எங்களை (இந்துக்கள், சீக்கியர்களை) பார்த்து நீங்கள் கூறுகிறீர்கள். எங்களை நாங்களே பாதுகாத்துக் கொள்ளமுடியாவிட்டால் புலம்பெயர்ந்து வந்துவிடுங்கள் என்று. மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது உங்கள் அறிக்கை. மாபெரும் காங்கிரஸ் இயக்கம் எங்களை அனாதரவாக நட்டாற்றில் கைவிட்டு விட்டது.

காலம் காலமாக அஹிம்சையை போதித்து போதித்தே பாதுகாக்க தைரியமற்றவராக்கிய எங்களை நிராயுதபாணியாக்கி காங்கிரஸ் கட்சி இப்போது தப்பி ஓடிவரும்படி ஆலோசனை கூறுகிறது.

நான் கேட்கிறேன். ஓடிவரும் எங்களுக்கு அங்கே எந்த ஏரியாவை ஒதுக்கியிருக்கிறீர்கள்? நாங்கள் மானத்தோடு குடியமர என்ன ஏற்பாடு? நாங்கள் எத்தனை பேர் வருவது? எப்படி வருவது? எங்கள் அசையாச் சொத்துக்களை நாங்கள் என்ன செய்வது? எங்கள் ஒவ்வொருவருக்கும் வேலை தருவீர்களா? உங்கள் நிவாரண முகாம்களில் பிச்சைக்காரர்களைப் போல நீங்கள் வீசியெறியும் ரொட்டித்துண்டுகளுக்காக காத்துக்கிடக்க அழைக்கிறீர்களா?

ஐந்து நதிகள் பாயும் எங்கள் பஞ்சாப் பூமியில் நாங்கள் கவுரவமாக தலை நிமிர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உங்கள் பிகான்களையும் மதராசிகளையும் உ.பி.வாலாக்களையும போலவே. நீங்கள் எங்களையும் வங்காளிகளையும் காவு கொடுத்து உங்கள் நாட்டின் பிற பகுதிகளுக்கு விடுதலை வாங்கித் தந்துள்ளீர்கள்.

பைத்தியங்களைப் போலவும் நாடோடிகளைப் போலவும் எங்கள் மண்ணைவிட்டு ஓடி வர முடியாது. ராவல்பிண்டியில் நடந்தது போல இங்கும் நடக்கும் என்றால் நாங்கள் இந்துக்களாக இருப்பதற்காக ஓடிவந்து உங்களிடம் கையேந்தி நிற்கமாட்டோம். நாங்கள் முஸ்லீம்களாக மாறி விடுவோம்.

உங்கள் வார்த்தை ஜாலங்கள் எங்களுக்குத் தேவையில்லை. நேரடியாக பாதுகாப்பு ஏற்பாடுகள் தேவை. அதற்கு உங்களால் முடியாது என்றால் இந்த பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியை கலைத்துவிடுங்கள். எங்கள் விதியை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.

''கோழைகளே! கோழைத்தனமான உங்கள் தத்துவங்களுக்கும் சொற்பொழிவுகளுக்கும் பெரிய கும்பிடு. நாங்கள் வாழ்கிறோம் அல்லது சாகிறோம். இந்துக்களாக இருக்கிறோம் அல்லது எப்படியோ மாறுகிறோம். உங்களால் எதுவும் செய்ய முடியாத நிலையில் உங்கள் திருவாய்களை பொத்திக் கொண்டு ஓடிவிடுங்கள். எங்கள் கொதிக்கும் பூமியில் கால் வைக்காதீர்கள்'' (அகில இந்திய காங்கிரஸ் கட்சி ஆவணங்கள் கோப்பு எண் CL 9 பகுதி 1,1947 பஞ்சாப்) இக்கடிதத்தில் எழுப்பப்பட்ட வினாக்களுக்கு எவரிடத்திலும் விடைகள் இல்லை.

அவரவர் வாழ்க்கையை அவரவர் தீர்மானித்துக் கொள்ளும் பதட்டமான சூழல் நிலவியது.

வசதி படைத்தவர்கள் பத்திரிகைகளில் விளம்பரம் செய்தனர். "ராவல்பிண்டியில் 14 அறைகள் கொண்ட இரண்டடுக்கு மாளிகையும் நகரை அடுத்து அறுபது ஏக்கர் விளைச்சல் நிலமும் சொந்தமாகக் கொண்ட ஒருவர் இந்தியாவில் கான்பூர் அல்லது லக்னோவை ஒட்டிய நகர்ப் பகுதியில் இதற்கு ஈடான சொத்துக்கள் உடைய ஒருவருடன் அப்படியே பரிமாற்றம் செய்துகொள்ள தயாராக இருக்கிறார். தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி..

India2pak-kafilaஇது போன்ற எண்ணற்ற விளம்பரங்கள் தினசரிகளில் வரத்துவங்கின. ஆலை முதலாளிகள் இதுபோல சொத்துக்கள் ஆங்காங்கே இருக்க குடும்பங்கள் மட்டும் இடம் பெயர்ந்து தங்கள் நிலைகளை காப்பாற்றிக் கொண்டனர். ஆகஸ்ட் 15க்கு முன்பே இந்தப் பரிமாற்றங்கள் நிகழத் துவங்கி விட்டன.

எனினும் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களை விட்டு விட்டு உயிரைச் காப்பாற்றிக் கொள்ள பூர்வீக ஊர்களை நிரந்தரமாக துறந்து இருபக்கமும் மக்கள் புலம்பெயர்ந்தனர்.

எப்படி நிகழ்ந்தது? எப்படியெல்லாம் நிகழ்ந்தது?

ஒரு கிராமத்தில் திடீரென ஒரு வதந்தி வேகமாகப்பரவும். "முஸ்லீம் குண்டர்கள் (அது முஸ்லீம் கிராமமாக இருந்தால் இந்து குண்டர்கள்) நம் ஊரை நோக்கி ஆயுதங்களோடு வந்து கொண்டிருக்கிறார்கள், வதந்தி பரவியதும் உடனே ஊரே பதறி எழும். பெண்கள் குழந்தைகள் எல்லோரும் ஒரே வீட்டில் பாதுகாப்பாக கூடுவார்கள். ஆண்கள் ஆயுதபாணியாகி எதிர்த்தாக்குதலுக்குத் தயாராவார்கள். பல இடங்களில் மோதல்கள் நடந்தன. சொத்துக்கள் சூறையாடப்பட்டன. மக்கள் கொல்லப்பட்டார்கள். கட்டாய மத மாற்றத்துக்கு நிர்பந்திக்கப்பட்டார்கள். பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள்.

இது போன்ற சம்பவங்கள் நடக்க நடக்க நாளுக்கு நாள் பீதி அதிகரித்தது. பல கிராமங்கள் ஊரைக் காலி செய்துவிட்டு கால்நடைகளுடனும் தட்டுமுட்டுச் சாமான்களுடனும் இந்தியாவை (அல்லது பாகிஸ்தானை) நோக்கி நடக்க ஆரம்பித்தனர். வழியில் உள்ள கிராம மக்களும் சேர்ந்து கொள்வார்கள். சாலைப் பயணம் நீள நீள நடக்கின்ற கூட்டமும் பத்தாயிரம் பேர் இருபதாயிரம் பேர் எனப் பெருகும். இந்த ஊர்ந்து போகும் மக்கள் திரளை "கஃபிலா' (Kafila) என்று அழைத்தனர். மிகப் பெரிய கஃபிலாவில் ஒரு சமயம் 4 லட்சம் பேர் நடந்து வந்தனர். இந்த அனாதரவான கஃபிலா ஒரு இடத்தைக் கடக்க எட்டு நாள் ஆனது.

இடையில் மதவெறியர்களின் தாக்குதலுக்கு இந்த கஃபிலா ஆளாகும். பெண்கள் கடத்திச் செல்லப்படுவார்கள்... ஒன்றும் செய்ய முடியாது. கதறி அழுதபடி ‘கஃபிலா'வின் பயணம் தொடரும். எதிரெதிர் திசைகளில் கஃபிலாக்களின் நகர்தல் குடிக்க நீரின்றி, உண்ண உணவின்றி, நோய்க்கு மருந்தின்றி, செத்துச் செத்து விழுந்த மக்கள் ஏராளம்.

பின்னர் பல கிராமங்களில் ""தாக்குதலுக்குப் படைவருகிறது'' என்ற வதந்தி பரவியதுமே கற்பழிக்கப்படலாம் என்ற அச்சத்தின் விளைவாக படை எதுவும் வருவதற்கு முன்னே பெண்கள் தீக்குளித்தும் வீட்டுக் கிணறுகளில் விழுந்தும் தற்கொலை செய்து தங்கள் மானம் காத்துக் கொண்டனர். அல்லது தங்கள் வீட்டு ஆண்களால் முன்கூட்டியே கொல்லப்பட்டனர். இந்த (தற்)கொலைகள் முடிந்த பிறகு எந்த தாக்குதலும் நடக்காமலே வீண் வதந்தியாகப் போன சம்பவங்களும் உண்டு.

குறைந்தது 10 லட்சம் பேர் கொல்லப்பட்டனர். பஞ்சாபில் மட்டும் ஒரு கோடிப் பேருக்கு மேல் எல்லையை கடந்தனர். 75000 பெண்கள் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகினர்.

கடத்தப்பட்ட தங்கள் பெண்கள், குழந்தைகள் பற்றி முறையாக புகார் தந்தவர்கள் பலர். விபரம் தெரியாமல் கண்ணீருடன் காலத்தில் புதைந்து போனவர்கள் பலர். புகார்களின் எண்ணிக்கை பெருகப் பெருக 1949ல் இந்திய அரசு ஒரு சட்டம் கொண்டு வந்தது. "கடத்தப் பட்டவர்களின் மீட்பு மற்றும் மறு வாழ்வுக்கான சட்டம் 1949'' கடத்தப்பட்டவர் யார் என்பதை அந்தச் சட்டம் விளக்கியது.

"1.3.1947க்குப் பிறகும் 1.1.1949 க்கு முன்பும் தங்கள் குடும்பத்தாரிடமிருந்து பிரிக்கப்பட்ட 16 வயதுக்கு கீழ்ப்பட்ட ஆண் மற்றும் எல்லா வயது பெண்களும் இந்த தேதிகளுக்கு இடையே பிறந்த குழந்தைகளும் கடத்தப்பட்டவராக கருதப்படுவர்.

இந்திய மற்றும் பாகிஸ்தானியர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு புகார்களின் அடிப்படையில் இரு நாடுகளிலும் தேடும்பணி நடைபெற்றது. பலர் மீட்கப்பட்டு அவரவர் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

1957 வரை தேடும்பணி தொடர்ந்தது. 1957 உடன் இச்சட்டம் காலாவதியானது. அதற்கு மேல் தேடுவதற்கு இரு நாடுகளிலும் அனுமதி இல்லை.

தொலைந்தவர்கள் தொலைந்து போனவர்கள்தான். ஆகஸ்டு 1956ல் கராச்சியிலிருந்து வெளிவந்த (Dawn) டான் என்ற பத்திரிகை ஒரு தந்தையின் சோகத்தை எழுதியிருந்தது. இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு துரத்தப்பட்ட குவா மருத்தீன் அகமத் என்பவர் வழியில் தன் பெண் குழந்தை கடத்தப்பட்டதை பற்றி பாகிஸ்தான் அரசுக்கு புகார் செய்தார். அரசு எதுவுமே செய்யாததால் அவரே தன் மகளைத் தேடி இந்தியாவுக்கு தன்சொந்த நகருக்கு வந்தார்.

அவர் பல சில்லறைக் காரணங்களைக் காட்டி கைது செய்யப்பட்டு பாகிஸ்தானுக்கு திருப்பப்பட்டார். மீண்டும் மகளைத் தேடி இந்தியா வந்த அவர் "பாகிஸ்தான் உளவாளி'' என குற்றம் சாட்டப்பட்டு 1951ல் சிறையிலடைக்கப்பட்டார். விடுதலையான பிறகு பாகிஸ்தான் சென்று மீண்டும் அரசுக்கு விண்ணப்பித்தார். இந்திய அரசு அவருக்கு உதவாதது பற்றிகூட அவர் வருத்தப்படவில்லை. பாகிஸ்தான் அரசு எதுவுமே செய்யவில்லையே என வருந்தி கடிதங்கள் எழுதிக் கொண்டே இருந்தார்.

அதற்குள் 1957 வந்துவிட்டது. கடத்தப்பட்டவர்களை மீட்கும் சட்டமும் காலாவதி ஆனது. இரு நாடுகளிலும் வாழ்ந்த எத்தனையோ தந்தையரைப்போல அவரும் அவரது மகளை நிரந்தரமாக இழந்த சோகத்துடன் உறைந்து போயிருப்பார். இதுபோல கற்பழிக்கப்பட்ட பெண்களுக்குப் பிறந்து அனாதையான குழந்தைகளை என்ன செய்வது என்பது இரு நாடுகளிலும் பிரச்சினை ஆனது. ஒரு இந்து தகப்பனுக்கும் முஸ்லீம் பெண்ணுக்கும் பிறந்த குழந்தை எந்த மதத்தை சேரும்? அல்லது முஸ்லீம் தகப்பனுக்கும் இந்து தாய்க்கும் பிறந்த குழந்தையை எங்கே வைத்திருப்பது? இந்தியாவிலா? பாகிஸ்தானிலா? அது எந்த நாட்டுப் பிரஜையாக இருக்கும்?

நாடாளுமன்ற அவைகளில் அமைச்சர் பெருமக்கள் அறிஞர்கள் விவாதித்தனர். தகப்பனின் மதம் தான் குழந்தைக்கும் பொருந்தும் என பெரும்பாலோனோர் பேசினர். ஆனால் இந்த குழந்தைகளைப் பொறுத்தவரை பாலியல் பலாத்காரம் செய்த கயவர்களல்லவா தகப்பன்கள்? தகப்பன் என்ற வார்த்தை அவர்களுக்குப் பொருந்துமா?

அதிர்ச்சியூட்டும் கருத்துக்களை அறிஞர்கள் அவைகளில் அள்ளி வீசிக் கொண்டிருக்க அனாதைக் குழந்தைகள் இந்திய பாகிஸ்தான் தெருக்களில் குழந்தை உழைப்பாளிகளாக பிச்சைக்காரர்களாக சில்லறைத் திருடர்களாக தங்கள் பால்ய காலத்தை கரைக்கத் துவங்கி விட்டிருந்தனர். ஆசிரமங்களில் இருந்த அனாதைக் குழந்தைகளை தத்து எடுத்துச் சென்றவர்களும் ஆண் குழந்தைகளையே எடுத்துச் சென்றனர். பெண் குழந்தைகளை வேறு நோக்கங்களுக்காக தத்து எடுத்துச் சென்றனர். பலர் தத்து எடுத்துச் சென்ற பெண் குழந்தைகளை ரொம்ப சேட்டை செய்வதாகக் கூறி மீண்டும் ஆசிரமத்திலேயே கொண்டுவிட்டனர்.

நாங்கள் யார்?:

இதற்கிடையே 50,000 தாழ்த்தப்பட்ட குடும்பங்கள் பாகிஸ்தானிலிருந்து தப்பி இந்தியா வந்து சேர்ந்திருந்தனர். நிவாரண முகாம்களில் அவர்களுக்கு அடைக்கலம் தராமல் அதிகாரிகள் தட்டிக் கழித்தனர். எல்லைப்பகுதியில் இரண்டு வகையான நிவாரண முகாம்கள் அப்போது இயங்கின. பாகிஸ்தானிலிருந்து தப்பி வந்த இந்துக்கள் சீக்கியர்களுக்கான முகாம் ஒன்று. பாகிஸ்தான் செல்வதற்காக காத்திருக்கும் முஸ்லீம்களுக்கான முகாம் ஒன்று. சாதி இந்துக்களை முகாம்களில் சேர்க்க முழு முயற்சியில் ஈடுபட்ட அதிகாரிகள் தாழ்த்தப்பட்ட மக்களை எதிலும் சேர்க்க மறுத்தனர். முகாம்களில் இருப்பவர்களுக்குத்தான் ரேஷன் கிடைக்கும்.

Violence1947 டிசம்பர் வாக்கில் டாக்டர் அம்பேத்கார் இது குறித்து நேருவுக்கு கடிதம் எழுதினார். ஒன்றும் நடக்கவில்லை. பாகிஸ்தானில் நிலபுலன் வைத்திருந்தவர்கள் அதற்கான சான்றுகளை இந்திய அதிகாரிகளிடம் காட்டினால் அவர்களுக்கு மாற்று ஏற்பாடாக இங்கு முஸ்லீம்கள் விட்டுச் சென்ற நிலபுலன்கள் ஈடாகத் தரப்பட்டன. இதே நடைமுறை பாகிஸ்தானிலும் இருந்தது.

ஆனால் தாழ்த்தப்பட்ட மக்கள் நிலங்களில் காலம் காலமாய் பாடுபட்டார்களே ஒழிய உடமையாளர்களாக இருக்கவில்லை. எனவே சட்டப்படி இந்திய அதிகாரிகளிடம் விவசாயிகள் என்று நிரூபிக்க அவர்களிடம் எந்த சான்றும் இருக்கவில்லை. ஈடாகப்பெற நிலமும் கிட்டவில்லை. நிவாரண முகாம்களில் ரேஷனும் கிட்டவில்லை.

பொறுப்புக்கு வந்ததும் முதல் காரியமாக பாகிஸ்தான் அரசு தாழ்த்தப்பட்ட தீண்டத்தகாத மக்கள் இந்தியாவுக்கு புலம் பெயர்வதை உடனடியாக தடை செய்து உத்தரவு பிறப்பித்தது. எல்லா தாழ்த்தப்பட்டோரும் இந்தியா சென்று விட்டால் கக்கூஸ் அள்ளுவது யார்? சாக்கடை அள்ளுவது யார்? அத்தியாவசியப் பணி பராமரிப்பு சட்டத்தின் (ESMA)கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டு கக்கூஸ்களுக்கு அனுப்பப்பட்டனர். இந்தியாவிலும் இது தான் நடந்தது.

தாழ்த்தப்பட்ட மக்கள் முஸ்லீம்களும் அல்லர். இந்துக்களும் அல்லர் என்றால் நாங்கள் யார்? நாங்கள் தீண்டத்தகாதவர்கள் உங்கள் பார்வையில் அசுத்தமானவர்கள் எங்களுக்கு "அசுத்தஸ்தான்'' என்று தனி நாடு கொடுங்கள் என்றெல்லாம் குரல்களும் இயக்கங்களும் கிளம்பின.

திரு. பியாலால் (Mr. Beah Lall) 1946 நவம்பரில் "அகில இந்திய அசுத்தஸ்தான் இயக்கத்தை'' நிறுவினார். "இந்துக்களும் முஸ்லீம்களும் தங்களின் எண்ணிக்கையை உயர்த்திக் கொள்வதற்காக இப்போது தீண்டத்தகாத எங்களை தங்கள் பக்கம் இழுக்கிறார்கள். ஆனால் இந்துஸ்தான், பாகிஸ்தான், இங்கிலீஸ்தான் ஆகிய இந்த மூன்று ஸ்தான வாதிகளும் எங்களை காலம் காலமாக கசக்கிப் பிழிந்ததை நாங்கள் மறக்க முடியுமா? நாங்கள் இந்தியாவில்தான் பிறந்தோம் எனவே இந்தியாவின் ஒரு பகுதியை "அசுத்தஸ்தான்'' ஆக்கித்தாருங்கள் எங்கள் வழியை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்'' என்ற திரு பியாலால் பிரகடனம் செய்தார். (ஆதாரம் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி ஆவணங்கள் கோப்பு எண் G19(KW-1) ஹரிஜன் சேவக் சங் – 1946 - 48)

1947 மார்ச் 6 இல் நடைபெற்ற உத்திரபிரதேச தாழ்த்தப்பட்டோர் சம்மேளன மாநாட்டில் பேசிய இடைக்கால அரசின் சட்ட உறுப்பினர் ஜே. என். மண்டல், "எனக்கு காந்திஜியின் மீது பெரிய நம்பிக்கை எதுவும் இல்லை. ஹரிஜனங்களுக்கு கோயில் கதவுகளை திறந்து விட்டு சமபந்தி போஜனம் செய்தால் போதுமா? எனவே நான் லீகுடன் கை கோர்க்க தயாராகி விட்டேன். முஸ்லீம்கள் நம்மைப்போல ஏழைகள். பின்தங்கியவர்கள். தீண்டத்தகாதவர்கள்'' என முழங்கினார். (மேற்படி AICC ஆவணம்.)

இன்னும் சிலர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு போதிய வசதிகளும் சலுகைகளும் செய்து தராவிட்டால் அவர்கள் முஸ்லீம்களாக மதம் மாறிவிடுவார்கள். அது பிறகு காங்கிரசுக்கும் இந்துக்களுக்கும் பெரிய இடைஞ்சலாக வந்து சேரும் என்று நயந்தும் மிரட்டியும் பேசிப்பார்த்தனர்.

எவ்வாறாயினும் தாழ்த்தப்பட்டவரின் குரல்களை எந்த நாடும் (விசேஷமாக கவனிப்பது இருக்கட்டும்) கண்டு கொள்ளவே இல்லை. தலைவர்கள் உடனடியாக கவனிக்க வேறு ஆயிரம் பிரச்சனைகள் இருந்தன.

ஆனால் தேசப்பிரிவினையை ஒட்டி கலவரங்களின் போது தாழ்த்தப்பட்ட மக்கள் தாக்கப்படவில்லை. துன்புறுத்தப்படவில்லை. 1947 மார்ச் மாதத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட ராவல்பிண்டி பகுதியில் சுற்றுப்பயணம் செய்த அகில இந்திய தாழ்த்தப்பட்டோர் சம்மேளன பொதுச் செயலாளர் பி.என். ராஜ்போஜ" எழுதினார். "நான் சுற்றுப்பயணம் செய்த எந்தப்பகுதியிலும் தாழ்த்தப்பட்டவர் எவரும் கலவரத்தால் பாதிக்கப்படவில்லை என்பதை கண்டேன். இந்துக்களை போல தோற்றமளித்த தாழ்த்தப்பட்டவர் சிலர் ஒரு சில இடங்களில் தவறுதலாக தாக்கப்பட்டுள்ளனர். மற்றபடி வேறு எங்கும் இல்லை.

Communal violenceஆனால் தாழ்த்தப்பட்ட பெண்களும் மற்ற இந்து, முஸ்லீம் பெண்களைப் போல கற்பழிக்கப்பட்ட சம்பவங்கள் நிறைய உண்டு.

பெண்ணின் உடம்பின் மீது எழுதப்படும் சரித்திரம் :

வகுப்புவாதம் தலைவிரித்தாடிய அந்த நாட்களில் பெண்கள் நடத்தப்பட்ட விதங்களை வகைப்படுத்திப் பார்ப்பது அவசியம்.

"அவர்களு''டைய பெண்களை இழிவுபடுத்துவது அவர்களுடைய மதத்தை நம்பிக்கைகளை அவர்களுடைய தன்மானத்தை ஆழமாக, கிழிக்கும் செயல் என்பதாக பரஸ்பரம் இந்துக்களும் முஸ்லீம்களும் புரிந்து கொண்டிருந்தனர்.

மாற்று மதத்தவரின் இளம் பெண்களை கடத்திச் சென்றனர். பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கினர். அவர்களை கெடுத்ததன் மூலம் தங்கள் மதத்துக் குழந்தை அவர்களின் வயிற்றில் வளர வித்திட்டனர். பெண்ணின் உடம்பின் மீது செய்யும் ஆக்கிரமிப்பு பிற மதத்தவர் மீது நாட்டிய வெற்றிக் கொடியானது.

"அவர்களது'' பெண்களை நிர்வாணமாக்கி நடுத்தெருவில் ஓடச்செய்வது.

பெண்களை நிர்வாணமாக்கி அவர்களது மார்பகங்களை அறுத்து எறிவது (இதனால் இறந்தவர்கள் ஏராளம்).

பெண் உறுப்பு மற்றும் மார்பகங்களில் பிறைச்சந்திரன் திரிசூலம் சின்னத்தை சூட்டுகோலால் வரைவது என்றும் அழியாத கேவலமாக பெண்ணின் அந்தரங்க உறுப்பில் மாற்று மதத்தின் சின்னம்.

"அவர்கள்'' தாக்க வருகிறார்கள் என்று அறிந்தும் தாங்கள் வீட்டுப் பெண்களை கொன்று விட்டு தப்பிச் செல்வது அல்லது தம் வீட்டுப் பெண்களை தற்கொலை செய்து கொள்ளுமாறு தூண்டுவது நிர்ப்பந்திப்பது வழிகாட்டுவது.

தங்கள் உயிரை பலியாகக் கொடுத்த தம் வீட்டுப் பெண்களை குல தெய்வமாக்கி இன்றும் வணங்கி வருவது தற்கொலை செய்ய மறுத்து இன்றும் உயிர்வாழும் தம்வீட்டுப் பெண்களை மாற்றுக் குறைவாக மதிப்பது.

முடிவற்று நீண்டு செல்லும் துயர்மிக்க கதைகளை தேசப்பிரிவினை நமக்குப்பரிசாகத் தந்துவிட்டது.

தேசப்பிரிவினையில் பாகிஸ்தான் பகுதியிலிருந்து உயிர் தப்பி "நம்ம தேசம்'' இந்தியாவுக்கு வந்து நிம்மதியாக பெருமூச்சு விட்ட ஆயிரக்கணக்கான சீக்கியக் குடும்பங்கள் 1984ல் இந்திராகாந்தி கொலை செய்யப்பட்ட போது மீண்டும் அதே 1947ஐ அனுபவித்தனர். டெல்லியிலும் மீரட்டிலும் கான்பூரிலும் என காங்கிரஸ் குண்டர்களும் இந்து வெறியர்களும் சீக்கிய மக்கள் மீது தொடுத்த தாக்குதல் அதிர்ச்சி மிக்க பல கேள்விகளை எழுப்புகின்றது.

1992 டிசம்பரில் பாபர் மசூதி இடிப்பை தொடர்ந்து பம்பாயில் முஸ்லீம் மக்கள் மீது தொடுக்கப்பட்ட திட்டமிட்ட தாக்குதல் ஆயிரக்கணக்கான முஸ்லீம் மக்களை அகதிகளாக்கி பம்பாயை விட்டு ஓடவைத்தது.

தமிழக தென்மாவட்ட சாதிக்கலவரங்களின் போது பல கிராமங்களில் மக்கள் ஊரைக்காலி செய்து விட்டு மறைந்து திரிந்தார்கள், அகதிகளாக.

ஒரு வார்த்தையில் சொல்வதானால் "1947'' திரும்பத் திரும்ப நம் நாட்டில் நடந்து கொண்டே இருக்கிறது.

1947 ஐ மீண்டும் மறுவாசிப்பு செய்வதும் கட்டுடைத்துப் பார்ப்பதும் இன்றைய வகுப்புவாதத்தின் வேர்களை அடையாளம் காண உதவக்கூடும்.

ஒரு நூற்றாண்டு விடைபெறும் புள்ளியில் 1947 நமக்கு முன் வைக்கும் கேள்விகள் பல.

லட்சக்கணக்கில் மக்கள் கொல்லப்பட்டது தீவிரவாதிகளால் அல்ல. சாதாரணமாக இணக்கமாக இயல்பாக வாழ்ந்து கொண்டிருந்த இந்துக்களும் முஸ்லீம்களும் பரஸ்பரம் கொலையாளிகளாகவும் பெண்களை கடத்துபவர்களாகவும் கற்பழிக்கிறவர்களாகவும் மாறியது எப்படி? சமாதான காலங்களில் தூவப்படும் வகுப்புவாத விதைகள் கொழுந்து விட்டெரிய சந்தர்ப்பங்கள்தான் தேவைப்படுகின்றன. நாம் சமாதானமான நேரங்களில் சும்மா இருந்துவிட்டு கலவரம் முடிந்த பிறகு மட்டும் தீவிரமாக வகுப்புவாத எதிர்ப்பு இயக்கம் நடத்துவதால் என்ன பயன் விளையும்?

கலவர நேரங்களில் மனிதர்கள் தங்கள் எல்லா அடையாளங்களும் மறக்கடிக்கப்பட்டு இந்து, முஸ்லீம் அல்லது தம் சாதி என்ற ஒற்றை அடையாளத்துடன் மோதுகிறார்கள். எப்போதும் தங்கள் பன்முக அடையாளங்களை இழக்காதிருக்க இடைவிடாத கருத்துலக இயக்கம் தேவை அல்லவா? பெண்ணின் உடம்பு இலகுவான ஆக்கிரமிப்புக்கான நிலப்பரப்பாக தொடர்வதை எந்த நூற்றாண்டில் நாம் முடிவுக்குக் கொண்டு வரப்போகிறோம்? குடும்ப மானம் என்பது என்ன? மதத்தின் மானம் தேசத்தின் மானம் என்பதெல்லாம் என்ன? பாலியல் பலாத்காரத்தை வெறும் உடல் மீதான வன்முறையைப் போல பாவிக்க நமது புரையோடிப்போன கலாச்சாரத்தை எப்படி ஒழிக்கப் போகிறோம்? வக்கிரங்கள் ஒழியும் நாள் எது? பெண்ணுக்கு நாம் சொல்லப்போகும் பதில் என்ன?

தாழ்த்தப்பட்ட தீண்டத்தகாதவர் என ஒதுக்கப்பட்ட மக்களுக்கு நம் தேசமும் நம் சரித்திரமும் முட்டிக் கொள்ளும் மதங்களும் என்ன பதில் சொல்லப் போகின்றன?

கலவரங்களின்போது அனாதையாக்கப்படுகிற குழந்தைகளின் பால்யம் அதிர்ச்சியில் கன்றிப்போவதை நாம் எப்படி சன் செய்யப்போகிறோம்?

1947 என்பது ஒரு ஆண்டு அல்ல. 1947 என்பது இந்திய விடுதலை மட்டுமல்ல. மேலே நீளமாக பேசப்பட்டுள்ள அத்தனை துயரங்கள் அவலங்கள் மனிதக் கேவலங்கள் இவற்றின் ஒட்டு மொத்தமான குறியீடுதான் 1947.

தமிழ்ச் சமூக வரலாறு --- ஆ. சிவசுப்பிரமணியன்






சங்க காலம்

தமிழக வரலாற்றின் தொடக்க காலமான சங்ககாலம் இனக்குழு வாழ்க்கையிலிருந்து நிலமானிய முறையை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இதனால் இக்காலத்தை மாறுதல் நிகழும் காலம் (TRANSITION PERIOD) என்பர். உணவு தேடி வாழும் இனக்குழு வாழ்க்கை, கால்நடை வளர்ப்பினை மையமாகக் கொண்ட மேய்ச்சல் நில வாழ்க்கை, உணவு உற்பத்தி செய்யும் ஒரு விதமான நிலவுடைமைச் சமுதாய வாழ்க்கை என மூன்று வகையான சமூக அமைப்புகள் வெவ்வேறு நிலப்பகுதிகளில் ஒரே நேரத்தில் நிலவின. இதனடிப்படையில் வெவ்வேறு வகையான பொருளாதார நடவடிக்கைகளும் சமூக அமைப்புகளும் கொண்ட ஓர் அசமத்துவ வளர்ச்சி (UNEVEN DEVELOPMENT)சங்ககாலத்தில் நிலவியது.

நிலப் பாகுபாடு

மலையும் மலை சார்ந்த பகுதியும் குறிஞ்சி, காடும் காடு சார்ந்த பகுதியும் முல்லை, ஆறும் ஆறு பாயும் சமவெளிப் பகுதிகளும் மருதம், கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் என அழைக்கப்பட்டன. குறிஞ்சியும் முல்லையும் கோடையின் வெம்மையால் தம் நிலையிலிருந்து மாறுபட்டு நிற்கும். இது தற்காலிகமான ஒன்று. இந்நிலப்பகுதி பாலை எனப்பட்டது.

மக்களும் பண்பாடும்

குறிஞ்சி நில மக்கள் சிலம்பன், குறவன், வெற்பன், வேட்டுவர், கானவர், குன்றவர் என அழைக்கப்பட்டனர். தொடக்கத்தில் வில், அம்பு, வேல் ஆகியவற்றின் துணையுடன் வேட்டையாடி வாழ்ந்தனர். மூங்கிலரிசி, திணை, மலை நெல், தேன், கிழங்குகள் ஆகியனவும் உணவாகப் பயன்பட்டன. உணவு தேடி வாழும் வாழ்க்கை இங்கு நிலவியது. பின், புன்புல வேளாண்மை உருவாகியது. சேயோனாகிய முருகன் இவர்களுடைய கடவுளாக இருந்தான். பறை, தொண்டகப்பறை, குறிஞ்சியாழ் ஆகியன இங்கு வழங்கிய இசைக் கருவிகள். வள்ளிக்கூத்து குறிஞ்சி நிலத்துக்குரிய ஆட்டக் கலையாகும்.

ஆடுமாடுகளை மேய்க்கும் மேய்ச்ச்சல் நில வாழ்க்கையை மையமாகக் கொண்டது முல்லை நிலம். வரகு, சாமை, கேழ்வரகு, கடலை, அவரை, துவரை ஆகியன மழையை நம்பி மேற்கொண்ட வேளாண்மையில் கிட்டின. மாயோனாகிய திருமால் முல்லை நிலத்தின் கடவுள். ஏறுகோட்பறை, குழல், முல்லையாழ் ஆகியன இந்நிலத்துக்குரிய இசைக் கருவிகள். உணவு தேடும் வாழ்க்கையைக் கடந்து உணவு உற்பத்தி செய்யும் நிலையும் நிரைகளை சொத்துக்களாக கொள்ளும் நிலையும் இங்கு உருவாகின.

மலையிலும் காட்டிலும் அலைந்து திரிந்த நிலையிலிருந்து வளர்ச்சி பெற்று ஆற்றங்கரையில் நிலையாக வாழத் தொடங்கிய இடம் மருத நிலமாகும். இங்கு உழு தொழிலின் மூலம் உணவு உற்பத்தி நிகழ்ந்தது. ஆற்று நீரை நேரடியாகவும் நீர்நிலைகளில் தேக்கி வைத்தும் பயன்படுத்தினர். செந்நெல், வெண்நெல், கரும்பு, மஞ்சள் (பிற்காலத்தில் வாழை) ஆகியன முக்கிய உற்பத்திப் பொருளாயின. கரும்பிலிருந்து வெல்லம் தயாரிக்கும் கரும்பாலைகளும், உபரி நெல்லை மூலதனமாகக் கொண்டு பண்டமாற்று வாணிபத்தை மேற்கொண்ட வாணிப குழுக்களும் உருவாயின. சிற்×ர்கள் பேரூர்களாக வளர்ச்சி பெறத் தொடங்கின. நெல்லரிப் பறையும், மருதயாழும் இந்நிலத்தின் இசைக் கருவிகளாகயிருந்தன. தச்சர், கொல்லர், குயவர் ஆகிய கைவினைர்களின் தோற்றமும் இங்குதான் உருவாகியது.

நெய்தல் நிலப்பகுதியில் மீன்பிடித்தலும், உப்பு உற்பத்தி, உலர்மீன் உற்பத்தி செய்தலும், இவற்றை பிற நிலப்பகுதிகளுக்குக் கொண்டு சென்று பண்டமாற்று செய்தலும் முக்கிய தொழில்கள். இதன் வளர்ச்சி நிலையாகக் கடல் வாணிபம் உருவாகியது. நெய்தல் குடியிருப்புகள் பட்டினம், பாக்கம் என்றழைக்கப்பட்டன. வருணன் (வண்ணன்) இந்நிலத்தின் தெய்வம். நாவாய்பறையும், நெய்தல் யாழும் இசைக் கருவிகள்.

வளமற்ற நிலப்பகுதியான பாலையில் வழிப்பறியும் கொள்ளையும் மக்களின் துணைத் தொழில்களாயின. இங்கு வாழ்ந்த மறவர்களின் குடியிருப்பு, கொல் குறும்பு எனப்பட்டது. கொற்றவை, இந்நிலத்தின் தெய்வம். நிறைகோட்பறை, சூறைகோட்பறை, வாகையாழ் ஆகியன இந்நிலத்தின் இசைக் கருவிகள்.

சங்ககால அரசியல்

சங்ககாலத் தமிழகம் மன்னராட்சியின் கீழ் செயல்பட்டது. ஆட்சி புரிவோர் குறுநில மன்னர்கள். வேந்தர் என இரண்டு வகையாக அழைக்கப்பட்டனர். குறிஞ்சி முல்லை நெய்தல் பாலை ஆகிய நான்கு நிலப் பகுதிகளிலும் வாழ்ந்த குறவர், ஆயர், பரவர், மறவர் ஆகிய மக்கட் பிரிவினர் தத்தமக்கென சுயேச்சையான ஆளுவோரைக் கொண்டிருந்தனர். இவர்களையே குறுநில மன்னர்கள் என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடும். குறுநில மன்னர்களுக்கும் அவர்களால் ஆளப்படும் மக்களுக்குமிடையே ஆழமான வேறுபாடுகள் நிலவவில்லை. மருதநில அல்லது நெய்தல் நில நகர் ஒன்றினை மையமாகக் கொண்டு பரந்த நிலப்பகுதியை ஆட்சிபுரிந்தவர்கள் வேந்தர் எனப்பட்டனர். சேரர், சோழர், பாண்டியர் என மூன்று வேந்தர்கள் மட்டுமே பெருநிலப் பகுதியை ஆண்டனர். வாய்ப்பு நேரிடும் போது குறுநில மன்னர்களின் நிலப் பகுதியையும் தங்களுடன் இணைத்துக் கொண்டனர்.

மூவேந்தர்களுக்கு துணை புரிய 1. அமைச்சர், 2. புரோகிதர், 3. சேனாதிபதி, 4. தூதர், 5. ஒற்றர் என்போரைக் கொண்ட ஐம்பெருங் குழுவும், 1. கரணத் தலைவர், 2. கருமகாரர், 3. கனகச்சுற்றம், 4. கடைகாப்பாளர், 5. நகரமாந்தர், 6. படைத் தலைவர், 7. யானை வீரர், 8. இவுளிமறவர் என்போரைக் கொண்ட எண்பேராயம் என்ற அமைப்பும் இருந்தன. ஆயினும் இவ்விரு அமைப்புகளும் மன்னனைக் கட்டுப்படுத்தும் தன்மையன அல்ல. குறுநில மன்னர்கள் ஆண்ட பகுதிகளில் பொதியில் மன்றம் என்ற அமைப்புகள் செயல்பட்டன.

சமயம்

ஆவிகளின் மீது நம்பிக்கை கொண்ட ஆவி உலகக் கோட்பாடும் (Animism)‘குலக்குறி’ (Totem) வழிபாடும் மூத்தோர் வீரர் வழிபாடும் சங்ககாலச் சமயத்தில் செல்வாக்கு செலுத்தின. போரில் இறந்துபட்ட வீரர்களுக்கு நடுகல் நட்டி வழிபடும் நடுகல் வழிபாடு பரவலாக இருந்தது. கடிமரம், காவல்மரம் என்ற பெயரில் குறிப்பிட்ட மரங்கள் புனித மரங்களாகக் கருதப்பட்டன. பாம்பு வழிபாடும் வழக்கிலிருந்தது. திருமால், முருகன், கொற்றவை ஆகியன சங்ககாலத்தில் முக்கிய தெய்வங்களாக விளங்கின. இன்று பரவலாக உள்ள பிள்ளையார் வழிபாடு சங்ககாலத்தில் இல்லை. சிவனைப் பற்றிய குறிப்புகள் சங்க நூல்களில் இடம் பெற்றாலும் மேற்கூறிய தெய்வங்களைப் போல் செல்வாக்கு பெற்றிருக்கவில்லை. வாலியோன் என்ற பெயரில் பலராமர் வழிபாடு இருந்துள்ளது. சமணம், பௌத்தம் ஆகிய வடபுல சமயங்கள் இங்கு பரவின. வடமொழித் தாக்கத்தின் விளைவாக வேள்விகள் நிகழ்ந்தன. சங்ககால கவிஞர்கள் சிலர் இவ்விரு சமயங்களையும் தழுவியிருந்தனர். இவ்வுலக வாழ்க்கையை வெறுத்தொதுக்கும் நிலையாமைக் கோட்பாடு செல்வாக்குப் பெறவில்லை. வாழ்க்கை உவப்புக் கொள்கையே மேலோங்கியிருந்தது.

பொருளியல்

நாட்டில் அடிப்படைத் தொழிலாக வேளாண்மை அமைந்தது. மருதநிலப் பகுதியில் நெல்லும், கரும்பும் பயிர் செய்யப்பட்டன. எள், கொள், துவரை ஆகியன குறிஞ்சி, முல்லை நிலப்பகுதிகளில் பயிர் ஆயின. சாமை, வரகு, திணை ஆகியன முக்கிய புன்செய் நிலப் பயிர்களாகும். தேனெடுத்தல், கிழங்குகளை அகழ்ந்தெடுத்தல், மீன்பிடித்தல், உப்பு விளைவித்தல் ஆகியன ஏனைய பொருளாதார நடவடிக்கைகளாகும். நெசவு, கொல்வேலை, தச்சு வேலை, கருப்பஞ் சாற்றிலிருந்து வெல்லம் எடுத்தல், சங்கறுத்தல், கூடை முடைதல் ஆகியன முக்கிய கைத்தொழில்களாக அமைந்தன. பண்டமாற்று முறையில் வாணிகம் நிகழ்ந்தது. பெரிய நகரங்களில் அங்காடி என்ற பெயரில் சந்தைகள் இருந்தன. பகற்பொழுதில் செயல்படுபவை நாளங்காடி என்றும், இரவு நேரத்தில் செயல்படுபவை அல்லங்காடி என்றும் அழைக்கப்பட்டன. கடைத்தெரு நியமம் என்று அழைக்கப்பட்டது. பொருட்களைக் கொண்டு செல்ல எருதுகள் பூட்டப்பட்ட வண்டிகள் பயன்படடன. வணிகர்கள் சாத்து என்ற பெயரில் குழுக்களாகச் செயல்பட்டனர். மிளகு, அரிசி, இஞ்சி, ஏலம், மஞ்சள், இலவங்கம் ஆகிய உணவுப் பொருட்களும் சந்தனம், அகில் ஆகிய மணப் பொருட்களும் தமிழகத்திலிருந்து அரேபியா, எகிப்து, உரோம் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. குரங்கு, மயில், யானைத்தந்தம், முத்து ஆகியனவும் ஏற்றுமதியாயின. கடல் வாணிகத்திற்குப் பாய்கள் கட்டப்பட்ட மரக்கலங்கள் பயன்பட்டன.

இலக்கணம்

தமிழ் மொழி தொன்மையான நூலாக இன்று நம் பார்வைக்குக் கிட்டுவது தொல்காப்பியமாகும். தனக்கு முன்னால் வாழ்ந்த நூலாசிரியர்களின் நூல்களை கற்றுத் தேர்ந்து தொல்காப்பியர் இந்நூலை உருவாக்கியுள்ளார். எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று பிரிவுகளாக இந்நூல் அமைந்துள்ளது. பொதுவாக மொழிகளின் இலக்கணம் என்பது எழுத்து, சொல் யாப்பு சார்ந்ததாக மட்டுமே இருக்கும். ஆனால் தொல்காப்பியம் இவை மூன்றுடன் மட்டுமின்றி மனித வாழ்க்கையின் இலக்கணத்தை உணர்த்தும் வகையில் பொருளதிகாரம் என்ற அதிகாரத்தைப் படைத்துள்ளது.

இலக்கியம்

தமிழ் இலக்கியத்தின் பொற்காலமாக சங்ககாலம் அமைந்தது. இக்காலத்தில் தோன்றிய பெரும்பான்மைப் பாடல்கள் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்ற பெயரில் பிற்காலத்தில் தொகுப்பு நூல்களாகத் தொகுக்கப்பட்டன. 1. நற்றிணை, 2. குறுந்தொகை, 3. ஐங்குறுநூறு, 4. பதிற்றுப்பத்து, 5. பரிபாடல், 6. கலித்தொகை, 7. அகநானூறு, 8. புறநானூறு என்ற எட்டு நூல்களும் எட்டுத்தொகை என்ற தொகுப்பில் அடங்குகின்றன. இந்நூல்களில் இடம்பெற்றுள்ள பாடல்கள் பல்வேறு கவிஞர்களால் பல்வேறு கால கட்டங்களில் பாடப்பட்டவை. 1. திருமுருகாற்றுப்படை, 2. பொருநராற்றுப்படை, 3. சிறுபாணாற்றுப்படை, 4. பெரும்பாணாற்றுப்படை, 5. முல்லைப்பாட்டு, 6. மதுரைக் காஞ்சி, 7. நெடுநல் வாடை, 8. குறிஞ்சிப் பாட்டு, 9. பட்டினப்பாலை, 10. மலைபடுகடாம் என்ற பத்து நூல்களும் பத்துப்பாட்டு எனப் பெயர் பெற்றன. இவற்றுள் திருமுருகாற்றுப்படையும், நெடுநல்வாடையும் நக்கீரராலும், எஞ்சிய எட்டு நூல்களும் எட்டு கவிஞர்களாலும் இயற்றப்பட்டன. இவ்விலக்கியங்களின் தனிச்சிறப்பு இவை அகம் புறம் என்ற பொருள் பாகுபாடுகளைக் கொண்டிருப்பதாகும். மனிதர்களின் அகம் (மனம்) சார்ந்த காதல் தொடர்பான செய்திகளைக் கூறுவது அகத்திணை ஆகும். இதற்குப் புறத்தேயுள்ள கல்வி, வீரம், கொடை, நீதி அறமல்லன போன்றவற்றைக் குறிப்பது புறத்திணையாகும். அகநூல்களில் இடம்பெறும் காதலர்களை, இயற்பெயர் சுட்டிக் குறிப்பிடக் கூடாது, என்ற தொல்காப்பியர் விதியை சங்ககாலக் கவிஞர்கள் உறுதியாகக் கடைபிடித்தனர்.

சங்ககாலத்தை அடுத்து வரும் காலம் சங்கம் மருவிய காலம் எனப்படும். இக்காலத்தில் உருவான பதினெட்டு நூல்கள் பதினெண் கீழ்க்கணக்கு எனப்படுகின்றன. இவற்றுள் திணைமாலை நூற்றைம்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமாலை ஐம்பது, கார் நாற்பது, கைந்நிலை என்ற ஆறு நூல்களும் சங்ககால அகத்திணைமரபு சார்ந்தவை. எஞ்சிய நூல்களில் திருக்குறள் தவிர்ந்த, நாலடியார், பழமொழி, ஏலாதி, திரிகடுகம், நான்மணிக்கடிகை, ஆசாரக் கோவை, களவழி நாற்பது, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, சிறுபஞ்ச மூலம், முதுமொழிக் காஞ்சி என்ற பதினொறு நூல்களும் புறத்திணை சார்ந்தவை. குறள் அகமும், புறமும் சார்ந்த நூலாகும்.

பதினெண் கீழ்கணக்கு நூல்களுள் தலையான இடத்தைப் பெறுவது திருக்குறள். 1330 குறள் வெண்பாக்களைக் கொண்ட இந்நூல் அறம், பொருள், இன்பம் என்ற மூன்று பிரிவுகளைக் கொண்டது. எச்சமயத்தையும் சாராது வாழ்வியல் நெறிகளைக் கூறுவது இதன் தனிச் சிறப்பாகும். சங்க காலத்தில் வாழ்வியலின் பகுதியாகக் கருதப்பட்ட கள்ளுண்டல், பரத்தையற் பிரிவு, புலால் உண்ணுதல், சூதாடல் ஆகியன வள்ளுவரால் கடிந்தொதுக்கப்படுகின்றன. திருக்குறளுக்கு அடுத்த இடத்தைப் பெறும் நாலடியார் சமண முனிவர்கள் பலர் இயற்றிய பாடல்களின் தொகுப்பாகும். இந்நூல் குறளுக்கு மாறாக உலகியல் வாழ்க்கை மீது வெறுப்பை வெளிப்படுத்தி துறவறத்தை வற்புறுத்துகிறது. இன்னா நாற்பது, இனியவை நாற்பது என்ற இரு நூல்களும் வைதீக சமயச் சார்பானவை. ஒழுக்கங்களின் தொகுதி என்ற பொருளைத் தரும் ஆசாரக் கோவை என்ற நூல் வடமொழி நீதிநூல்கள் சிலவற்றின் சாரமாக அமைகின்றது. பழமொழி நானூறு, சிறுபஞ்சமூலம், ஏலாதி ஆகியன சமணம் சார்ந்து நீதி கூறுகின்றன.

பல்லவர் காலம் (கி.பி. 3 முதல் 9 வரை)

சங்ககாலத்துக்குப் பின் களப்பிரர் என்ற அரச மரபினரின் ஆட்சி நடைபெற்றது. இவர்கள் சமண சமயத்தைச் சார்ந்தவர்கள். இவர்களது காலத்தை இருண்ட காலம் என்று சொல்வது பொதுவான மரபு. ஆனால் திரமிள சங்கம் என்ற பெயரில் சங்கம் ஒன்றை அமைத்து தமிழ் வளர்த்தமையை சதாசிவபண்டாரத்தார் சுட்டிக்காட்டி, தமிழ் மொழிக்கு இது இருண்ட காலமல்ல என்பதைச் சான்றுகளுடன் நிறுவியுள்ளார். களப்பிரர் ஆட்சிக்குப் பின் பல்லவர் ஆட்சி தமிழகத்தில் நிலவியது. கி. பி. 260 தொடங்கி 450 ஆண்டுகள் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு பல்லவர் ஆட்சி நிலை பெற்றிருந்தது.

சமயம்

சைவமும், வைணவமும் எழுச்சி பெற்ற காலம் பல்லவர் காலம் ஆகும். சைவநாயன்மார்களும், வைணவ ஆழ்வார்களும் தோற்றுவித்த சமய இயக்கம் பக்தி இயக்கம். இவ்விரு சமயத்தினரும் சமணத்துடனும், பௌத்தத்துடனும் மாறுபட்டு அவற்றின் செல்வாக்கை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தேவார ஆசிரியர்களான திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் தமிழ் நாடெங்கும் பயணம் செய்து சைவ சமயத்திற்குப் புத்துயிர் ஊட்டினர். இவர்களால் பாடப்பெற்ற சைவக் கோயில்கள் பாடல் பெற்ற தலங்கள் எனப் பெயர் பெற்றன. இவர்களைப் போன்றே ஆழ்வார்களும் வைணவக் கோயில்களுக்குச் சென்று பக்திப் பாசுரங்கள் பாடினர். இவர்களால் பாடப்பெற்ற வைணவக் கோயில்கள் மங்களா சாசனம் செய்த திருப்பதிகள் எனப்பட்டன.

பௌத்த சமணத் துறவிகள் வாழும் சமய மடங்களில் சமய நூல்கள் கற்றுக் கொடுக்கப்பட்டன. காஞ்சிபுரம் பௌத்த மடத்தில் பயின்ற போதிதருமர், போதிருசி என்ற இரு துறவிகளும் சீனா, ஜப்பான் நாடுகளுக்குச் சென்று சென் புத்தமதப் பிரிவை பரப்பினர். பீகாரில் இருந்த உலகப் புகழ் பெற்ற நாலந்தா பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகவும், துணை வேந்தராகவும் இருந்த தருமபாலர் காஞ்சியில் பிறந்து பயின்றவர்தாம். வெளிநாட்டுப் புத்ததுறவிகள் இங்கு வந்து சமய நூல்களைக் கற்றுச் சென்றனர்.

பல்லவர் அரசு

சங்ககாலத்தைப் போன்றே பல்லவர் காலத்திலும் ஆட்சிமுறை பிறப்பு வழி உரிமையாய் இருந்து வந்தது. மன்னருக்குத் துணைபுரிய அமைச்சர்கள் இருந்தனர். ஆட்சிப் பகுதியானது கோட்டம், நாடு, ஊர் என்று மூன்று பிரிவுகளாக பகுக்கப்பட்டது. நாட்டின் நிர்வாகத்தைக் கவனித்து வந்தவர் நாட்டார் என்றும், ஊரின் ஆட்சிக்குப் பொறுப்பான வேளாளர்கள் ஊரார் என்றும் அழைக்கப்பட்டனர். இவை தவிர பிரம்மதேயம் என்ற பெயரில் பிராமணருக்கு தானமாக வழங்கப்பட்ட ஊர்களைப் பிராமணர்களே நிர்வகித்து வந்தனர். இம்மூன்று வகையான நிர்வாகிகளும் கோவில் மான்யங்கள், நீர்ப்பாசனம், நீதி விசாரணை, நிலவுரிமை போன்றவற்றை கவனித்து வந்தனர். இதன் பொருட்டு வாரியங்கள் பல உருவாக்கப்பட்டன. இவ்வாரியங்கள் அதற்கென்று விதிக்கப்பட்ட பணியினைச் செய்து வந்தன. சான்றாக வேளாண்மைக்கு ஆதரவான ஏரிகளைப் பராமரிக்கும் வாரியம் ஏரி வாரியம் என்றும் தோட்டங்களைப் பராமரிக்கும் வாரியம் தோட்ட வாரியம் என்று அழைக்கப்பட்டதைக் குறிப்பிடலாம்.

கலை

பல்லவர் காலத்தில் கட்டிடக் கலையும் சிற்பக் கலையும் வளர்ச்சியடைந்தது. கருங்கற்களினால் கட்டிடங்களை கட்டும் பணி பல்லவர் காலத்தில்தான் உருவாகியது. குகைகளை உருவாக்கி அமைக்கப்பட்ட குடைவரைக் கோவில்கள் பல்லவர் காலத்தில் செல்வாக்கு பெற்றன (பல்லவர்களுக்கு முன்னர் பாண்டியர்கள் குடைவரைக் கோவில்களை உருவாக்கி உள்ளனர் என்பது தொல்லியல் வல்லுநர் நாகசாமியின் கருத்து). கல்லிலே கலை வண்ணம் கண்ட பல்லவர் கால சிற்பக்கலைக்கு காஞ்சியிலும், மாமல்லபுரத்திலும் உள்ள கோவில் சிற்பங்கள் சான்று பகர்கின்றன. இவை தவிர இசையும், நடனமும் பல்லவர் காலத்தில் தழைத்தமைக்கு, குடுமியான்மலை, திருமெய்யம் ஊர்களில் காணப்படும் கல்வெட்டுக்களும் சித்தன்ன வாசலில் தீட்டப் பெற்றுள்ள நடன மங்கையரின் ஓவியங்களும் சான்று.

பல்லவர் காலத்தில் வடமொழி செழித்து வளர்ந்தது. பல்லவர்கள் வடமொழி ஆர்வலர்களாக இருந்தமையே இதற்குக் காரணமாகும். பல்லவ மன்னர்கள் அவையில் நடிப்பதற்காக பாஷகவி என்பவர் வடமொழி நாடகங்கள் சிலவற்றை எழுதியுள்ளார். பௌத்த துறவிகளைப் பகடி செய்யும் வகையில் மத்த விலாச பிரகசனம் என்ற எள்ளல் நாடகத்தை மகேந்திர வர்மன் வடமொழியில் எழுதியுள்ளான். அணி இலக்கண அறிஞரான தண்டி என்னும் கவிஞர் எழுதிய காவிய தரிஸனம் என்ற வடமொழி அணி இலக்கண நூல் தண்டியலங்காரம் என்ற பெயரில் தமிழில் வெளியாயிற்று. பாரதக் கதையைக் கூறும் பாரத வெண்பாவும் நந்திக் கலம்பகம் என்ற சிற்றிலக்கியமும், பெருங்கதை என்ற காப்பியமும் பல்லவர் காலத்தில் உருவான குறிப்பிடத்தக்க தமிழ் இலக்கியங்கள் ஆகும்.

சோழர் காலம் (கி.பி. 10 - கி.பி. 13)

பல்லவர் காலத்துக்குப் பின் தமிழ்நாட்டில் உருவான ஒரு வலிமையான அரசு சோழப் பேரரசு கும். சோழர் ஆட்சியிலும் மன்னனே ஆட்சி மையமாக அமைந்தான். சோழநாடு மண்டலங்கள் என்ற பெரும் பிரிவுகளைக் கொண்டிருந்தது. ஒவ்வொரு மண்டலத்துள்ளும் வளநாடுகள் பல இருந்தன. பல கிராமங்களின் தொகுப்பாக கூற்றம் என்ற அமைப்பு இருந்தது. இதை கோட்டம் அல்லது நாடு என்றும் குறிப்பிட்டனர். பல கூற்றங்களை உள்ளடக்கியதாக வளநாடு அமைந்தது. சுப்பாராயலுவின் கருத்துப்படி 10 முதல் 300 சதுரம் வரை பரப்பைக் கொண்ட நிருவாகப் பிரிவாக நாடு இருந்தது. நாடுகளின் பொருப்பாளர்களாக நாட்டார், நாடுகண்காணி என்போர் இருந்தனர். வேளாண்மை காவல் வரிவசூல் ஆகிய பணிகளை இவர்கள் மேற்கொண்டனர். மன்னனுக்கு உதவி புரிய இருக்கும் அரசு அலுவலர்கள் உடன் கூட்டம் என்று அழைக்கப்பட்டனர். வாய்மொழியாக மன்னன் பிறப்பிக்கும் ஆணைகளைக் கேட்டு அவற்றை எழுத்தில் பதிவு செய்து உரியவர்களிடத்தில் அனுப்பி வைக்கும் பணியைச் செய்பவன் திருவாய்க்கேள்வி திருமந்திர ஓலை எனப்பட்டான்.

கலை இலக்கியம்

சோழர் காலத்தில் கட்டிடக் கலையும் சிற்பக்கலையும் செழித்து வளர்ந்தன. தன் நிழலைத் தனக்குள்ளே தருக்குடனே தாங்கி நிற்கும் தஞ்சைப் பெருங்கோயில் மற்றும் கங்கை கொண்ட சோழபுரம், தராசுரம் ஆகிய ஊர்களிலுள்ள கோவில்களும் அங்குள்ள சிற்பங்களும் சோழர்காலக் கட்டிடக் கலைக்குச் சான்றுகளாய் உள்ளன.

சோழர் கால இலக்கியங்களில் சைவ சமயச் சார்புடைய இலக்கியங்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உருவாயின. உமாபதி சிவாச்சாரியார் என்பவர் எட்டு சைவ சித்தாந்த நூல்களை இயற்றியுள்ளார். சைவ சமயத்தின் 63 நாயன்மார்களின் வரலாற்றைக் கூறும் திருத்தொண்டர் புராணம் சேக்கிழாரால் இயற்றப்பட்டது. சிவபெருமான் மதுரையில் நிகழ்த்திய 64 திருவிளையாடல்களைக் கூறும் திருவிளையாடற் புராணம் என்ற நூலைப் பெரும்பற்றப் புலியூர் நம்பி என்பவர் எழுதியுள்ளார்.

ஆழ்வார்களின் பாசுரங்களுக்கு தமிழும் வடமொழியும் கலந்த மணிப்பிரவால நடையில் ஈடு எனப்படும் விரிவுரை இக்காலத்தில் உருவாகியது.

சமண சமயத்தைச் சார்ந்த திருத்தக்கத்தேவர் எழுதிய சீவகசிந்தாமணி, கொங்குவேளிர் எழுதிய பெருங்கதை ஆகிய காவியங்களும் வளையாபதி, நீலகேசி என்ற சமணக் காப்பியங்களும் குண்டலகேசி என்ற பௌத்த காப்பியமும் தோன்றின. திவாகரம், பிங்கலந்தை என்ற நிகண்டுகளும், நன்னூல், யாப்பருங்கலக்காரிகை, புறப்பொருள் வெண்பா மாலை, வீரசோழியம், வெண்பாப் பாட்டியல் ஆகிய இலக்கண நூல்களும் உருவாயின.

செயங்கொண்டார் பாடிய கலிங்கத்துப் பரணி ஒட்டக்கூத்தரின் மூவருலா, கம்பரின் இராமாயணம், புகழேந்தியின் நளவெண்பா ஆகியன சோழர் காலத்தில் தோன்றிய பிற இலக்கியங்கள் ஆகும். இளம்பூரணர், சேணாவரையர், பேராசிரியர், நச்சினார்க்கினியர், தெய்வச் சிலையார் ஆகியோர் தொல்காப்பியத்திற்கு உரை எழுதினர். சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லாரும், பரிபாடலுக்கும், திருக்குறளுக்கும் உரை எழுதிய பரிமேலழகரும் சோழர் காலத்தவரேயாவர்.

சோழர் காலத்தில் வடமொழிப் பயிற்சியளிக்கும் கல்வி நிறுவனங்கள் (கடிகா) பல நிறுவப்பட்டன. நூல்களைச் சேகரித்து வைக்கும் நூலகம் போன்ற அமைப்பு சோழர் காலத்தில் இருந்தது. இதை சரஸ்வதி பண்டாரம் என்றழைத்தனர்.

கிராமசபை

சோழர் ஆட்சியின் சிறப்பியல்பாக கிராம சுய ஆட்சி முறை நிலவியது. பிராமணர்களுக்கு உரிய நிலங்களுக்கு வரி வாங்கப்படவில்லை. இவை இறையிலி எனப்பட்டன. இறையிலி நிலங்களைக் கொண்ட பிராமணர் குடியிருப்புக்கள் கிராமங்கள் எனப்பட்டன. குடும்பு என்ற சிறு பிரிவுகளாக கிராமம் பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு குடும்புக்கும் ஓர் உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டார். குடும்புக்குரிய வேட்பாளர்களின் பெயர்களைப் பனை ஓலைத் துண்டில் தனித்தனியாக எழுதி அவ்வக் குடும்புக்குரிய குடத்தில் இடுவர். பின்னர் குடத்தை நன்றாக குலுக்கி அறியாச் சிறுவன் ஒருவனைக் கொண்டு ஓலைத்துண்டு ஒன்றை எடுக்கும்படி செய்வர். அவனால் எடுக்கப்படும் ஓலையில் காணப்படும் பெயருக்குரியவர் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். குடும்பில் உறுப்பினராவதற்கு தகுதிகள் வரையறுக்கப்பட்டிருந்தன. சொந்த மனையில் வீடு கட்டியிருத்தல், குறைந்தது கால்வேலி நிலமுடையவராய் இருத்தல், 35 வயதிற்குக் குறையாதிருத்தல், 70 வயதிற்கு மேற்படாதிருத்தல், நான்கு வேதத்தில் ஒரு வேதத்தையோ, ஒரு பாஷியத்தையோ ஓதும் ஆற்றல் பெற்றிருத்தல் என உத்திரமேரூர் சாசனம் குறிப்பிடுகிறது. அடித்தள மக்கள் கிராம சபைகளில் நுழைய விடாமல் தடுப்பதில் இத்தகுதிகள் முக்கியப் பங்காற்றின. மேலும் ஒரு குழுவிலோ, வாரியத்திலோ உறுப்பினராக இருந்து பணியாற்றிய போது ஒழுங்காகக் கணக்கு காட்டத் தவறியவர்கள், அவருடைய உறவினர்கள், ஒழுக்கமற்றவர்கள், வேட்பாளராகத் தகுதியற்றவர்கள் என்றும் இச்சாசனம் தெரிவிக்கின்றது.

இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களைக் கொண்டு வாரியங்கள் அமைக்கப்படும். ஏரி வாரியம், தோட்ட வாரியம், பஞ்சவார வாரியம், பொன் வாரியம், கலிங்கு வாரியம் கழனி வாரியம் ஆகியன முக்கிய வாரியங்களாகும். இவ்வாரியங்களின் உறுப்பினர்கள் வாரியப் பெருமக்கள் என்றழைக்கப்பட்டனர். ஒவ்வொரு வாரியங்களும் தமக்குரிய பணிகளைச் செய்து வந்தன.

பிராமணர் அல்லாதோர் வாழ்ந்த குடியிருப்புக்கள் ஊர்கள் எனப்பட்டன. இவற்றை ஊரவை நிறுவகித்தது. அவையின் நிர்வாகக்குழு, ஆளும் கணம் என்றழைக்கப்பட்டது. வணிகர்கள் மிகுதியாக வாழ்ந்த நகரங்களின் சபை நகரத்தோம் எனப்பட்டன.

சமூகம்

சோழர் காலச் சமுதாயத்தில் சாதி வேறுபாடுகள் ஆழமாக இருந்தன. பிராமணர்கள் ஏற்றம் பெற்றிருந்த சாதியினராக விளங்கினர். அகரங்கள், அக்கிரகாரங்கள், சதிர்வேதி மங்கலங்கள் என்ற பெயர்களில் பிராமணர்களுக்குத் தனிக்கிராமங்கள் உருவாக்கப்பட்டன. கோவில்கள், மடங்கள் ஆகியன இவர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தன. இலவச உணவும் உறையுளும் நல்கி வேதக்கல்வி புகட்டும் வேதபாட சாலைகளும் இவர்களுக்கென்றே மன்னர்களால் நிறுவப்பட்டன.

பிராமணர்களுக்கு அடுத்த நிலையில் நிலக்கிழார்களாக விளங்கிய வேளாளர்கள் இருந்தனர். கோவில் நிலங்களின் மீது பிராமணர்களுடன் இணைந்து இவர்கள் ஆதிக்கம் செலுத்தினர். இவ்விரு சமூகத்தினரையும் தவிர பல்வேறு கைவினைத் தொழில் செய்து வந்தவர்களும், உழுகுடிகளான, பள்ளர், பறையர் ஆகியோரும் தனித்தனி சாதிகளாக அழைத்திருந்தனர். சோழர் காலச் சாதிகள் வலங்கையர், இடங்கையர் என்ற இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. இவ்விரு பிரிவுகளின் உருவாக்கம் குறித்து வினோதமான புராணக் கதைகள் உருவாகியுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 98 குலங்கள் இடம் பெற்றிருந்தன. வலங்கையர் இடங்கையரிடையே சில நேரங்களில் பூசல்களும் மோதல்களும் நிகழ்ந்தன. பெரும்பாலும் இடங்கையினர் துன்புறுத்தலுக்கு ஆளாகி வந்தனர். சில நேரங்களில் வலங்கையினர் இடங்கையினர் ஆகிய இரு வகுப்பினரும் வேறுபாடுகளைத் துறந்துவிட்டு பிராமணர்களையும், வேளாளர்களையும் எதிர்த்துப் போராடியுள்ளனர். பெரும்பாலும் இப்போராட்டம் வரி எதிர்ப்பை மையமாகக் கொண்டேயிருந்தது.

தீண்டாமை சோழர் காலத்தில் வேர்விட்டு வளர்ந்திருந்தது. பறையர்களுக்கென்று தனிக்குடியிருப்புகள் இருந்தன. தீண்டாச்சேரி என்று இக்குடியிருப்புகள் அழைக்கப்பட்டன. ஆயினும் இவர்களில் சிலர் சொத்துரிமை உடையவர்களாகவும் இருந்தனர்.

ஆடலிலும், பாடலிலும் வல்ல பெண்டிரை விலைக்கு வாங்கியும், வன்முறையில் கைப்பற்றிக் கொண்டும் கோவில் பணிகளில் ஈடுபடுத்தினர். கோவிலைப் பெருக்கி மெழுகுதல், மாலை தொடுத்தல் தேவாரம் ஓதுதல், நடனமாடுதல், நாடகங்களில் நடித்தல் ஆகியன இவர்களின் முக்கியப் பணிகளாக அமைந்தன. தலைக்கோலிகள், தளிச்சேரிப் பெண்டுகள், பதியிலார், தேவரடியார் என்று இவர்களுக்குப் பெயர்கள் வழங்கின.

அடிமைமுறை சோழர் காலத்தில் நிலை பெற்றிருந்தது. மன்னர்களும், வளம் படைத்தவர்களும் ஆண்களையும், பெண்களையும் விலைக்கு வாங்கிக் கோவில்களுக்கும், மடங்களுக்கும் தானமாக வழங்கினர். அடிமை விற்பனை, ஓலையில் பத்திரம் போல் பதிவு செய்யப்பட்டது. இது ஆளோலை, ஆள்விலைப் பிரமாண இசைவுத் தீட்டு, அடிமை விற்பனைப் பத்திரம் எனப் பெயர் பெற்றது. வறுமையின் காரணமாகத் தம் குடும்ப உறுப்பினர்களை விற்பதும் தம்மைத்தாமே விற்றுக் கொள்வதும் நிகழ்ந்துள்ளன. ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த அடிமை தீண்டா அடிமை என்றழைக்கப்பட்டார். இவ்வாறு அடிமைகளானவர் மீது மாடுகளுக்கு இடுவது போல் இலச்சினை பொறிக்கப்பட்டது. அரண்மனை அடிமைகளுக்குப் புலிச்சின்னமும், சிவன் கோவில் அடிமைகளுக்குத் திரிசூலச் சின்னமும், வைணவ கோவில் அடிமைகளுக்குச் சங்குச் சின்னமும், இலட்சினையாக இடப்பட்டன. நெற்குற்றுதல், வேளாண் பணிகள், கோவிற் பணிகள் ஆகியன அடிமைகளின் முக்கிய பணிகளாகும். தங்களை மட்டுமின்றி தங்கள் பரம்பரையினரையும் அடிமைகளாக விற்றுக் கொண்டதை இவர்களையும் இவர்கள் வர்க்கத்தாரையும் பரம்பரை பரம்பரையாக, வழியடிமை, யானும் எம் வம்சத்தாரும் என்று கல்வெட்டுக்களில் காணப்படும் தொடர்கள் உணர்த்துகின்றன.

சமயம்

சோழர் காலத்தில் அரசு சமயமாக சைவம் விளங்கியது. சிவனுக்கு முக்கியத்துவம் இருந்தது. பல்லவர் காலத்தில் வளரத் தொடங்கிய சைவம் சோழர் காலத்தில் வளர்ச்சியின் உச்சத்தை எட்டியது. சைவ சமயத்தின் தத்துவமாக சைவ சித்தாந்தம் உருப்பெற்று செல்வாக்குற்றது. பதி (இறைவன்), பசு (உயிர்), பாசம் (இருள் + தளை) என்ற மூன்றும் சைவசித்தாந்தத்தின் அடிப்படைத் தத்துவமாகும். இதன்படி உலக உயிர்கள் ஆணவம் கன்மம் மாயை என்ற மூன்றையும் உள்ளடக்கிய பாசத்தை நீக்கி பதியாகிய இறைவனை அடைய வேண்டும். சைவசமய இலக்கியங்களாகப் பன்னிரு திருமுறைகள் அமைகின்றன. மறைந்து கிடந்த தேவாரப் பாடல்கள் ஏழு திருமுறைகளாக வகுக்கப்பட்டு கோவில்களில் ஓதப்பட்டன. இதைக் கண்காணிக்க தேவார நாயகம் என்ற அதிகாரி நியமிக்கப்பட்டிருந்தார். கோவில்களில் நாள்தோறும் விளக்கேற்றவும், தேவாரம் பாடவும், திருவிழாக்கள் நிகழ்த்தவும் மன்னர்களும் பொதுமக்களும் மானியம் வழங்கினர். சைவ வைணவ கோவில்களுக்கு வழங்கப்பட்ட நிலமானியங்கள் தேவதானம் எனப் பெயர் பெற்றன.

தமிழ் வைணவர்களின் புனித நூலான நாலாயிர திவ்ய பிரபந்தம் என்ற தொகுப்பு சோழர் காலத்தில்தான் உருப்பெற்றது.

பாண்டியர் காலம் (கி. பி. 13ம் நூற்றாண்டு)

சோழப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் உருவான பாண்டியப் பேரரசு சோழப் பேரரசைப் போன்றே மண்டலம், நாடு, கூற்றம் ஆகிய ஆட்சிப் பிரிவுகளைக் கொண்டிருந்தது. பல்லவர் காலத்தைப் போன்றே சோழர் காலமும் வேளாண்மையை மையமாகக் கொண்ட பெருமளவிலான கிராமங்களை அடிப்படை அலகாகக் கொண்டிருந்தது. வேளாண்மை முக்கியத் தொழிலாக இருந்தது. நெசவு, எண்ணெய் எடுத்தல், வெல்லம் தயாரித்தல், உப்பு விளைவித்தல் கிய தொழில்கள் நிகழ்ந்தன. பாண்டியர் ஆட்சியில் சிறப்புமிக்க தொழிலாக முத்து குளித்தல் விளங்கியது. உரோம் நாட்டிற்கு இம்முத்துக்கள் ஏற்றுமதியாகி தங்கத்தைக் கொண்டு வந்தன. மார்கோபோலோ என்ற இத்தாலி நாட்டு சுற்றுப் பயணி மாரவர்மன் குலசேகரன் என்ற பாண்டிய மன்னன் 1200 கோடி பொன்னைச் சேமித்து வைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். கொலைத் தண்டனை பெற்ற கைதிகள் முத்து குளித்தலில் ஈடுபடுத்தப்பட்டனர். வாணிபத்தின் பொருட்டு இங்கு வந்த அரேபியர்கள் இங்கே தங்கள் சமயத்தை பரப்பினர். பாண்டிய மன்னனின் அரசவையில் இஸ்லாமியர் சமயத்தைச் சார்ந்த அமைச்சர் ஒருவர் இடம் பெற்றிருந்தார். பாண்டியர்களின் கொற்கை துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி பெருமளவில் நிகழ்ந்தது. மணிக்கிராமம், அஞ்சு வண்ணத்தார் என்ற வணிகச் சங்கங்களும் நானாதேசிகன் என்ற பெயரில் அயல்நாட்டு வாணிபம் மேற்கொண்ட குழுவும் இருந்தன. அரேபிய நாட்டிலிருந்து குதிரைகள் இறக்குமதி பெருமளவில் நிகழ்ந்தது. இது குறித்து வசப் என்ற அரேபியர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

"அந்தக் குதிரைகள் வந்து இறங்கியதும், அவற்றிற்குப் பச்சை வாற்கோதுமையைத் தருவதற்கு மாறாக, வறுத்த வாற்கோதுமையையும் வெண்ணெய் சேர்த்துச் சமைத்த தானியத்தையும் தீனியாகப் போட்டுக் காய்ச்சிய ஆவின் பாலைக் குடிப்பதற்குக் கொடுக்கிறார்கள். இது மிகவும் விசித்திரமான செயல். லாயத்தில் முளைகளை அடித்து, குதிரைகளை அவற்றோடு கயிற்றால் பிணைத்து, அங்கேயே அவற்றை 40 நாள் விட்டு விடுகிறார்கள். அதனால் குதிரைகள் கொழுத்துப் பருத்துப் போகின்றன. பின்னர், அவற்றிற்குப் பயிற்சியளிக்காமலும் அங்கவடி முதலிய குதிரைச் சாமான்களைப் பூட்டாமலும், அவற்றின் மீது ஏறியுட்கார்ந்து இந்திய வீரர்கள் அவற்றைப் பிசாசைப் போல் ஓட்டுகிறார்கள். அவற்றின் வேகம் புரக்கின் வேகத்திற்குச் சமமாயிருக்கிறது. மிகுந்த வலிமையும் வேகமும் சுறுசுறுப்பும் உடைய புதிய குதிரைகளும் வெகு விரைவில் வலிமையற்ற, வேகமற்ற, பயனற்ற, மதியற்ற குதிரைகளாய் மாறிவிடுகின்றன. அதாவது, அவை எதற்கும் உதவாத இழி நிலையை எய்தி விடுகின்றன. சாட்டையடி வாங்காமலே மிக வேகமாக ஓடக்கூடிய வலிமைமிக்க அந்தக் குதிரைகள் இந்நாட்டுத் தட்பவெப்ப நிலையைத் தாங்க மாட்டாமல் வலியிழந்து வாடிப் போகின்றன. எனவே, அவை சவாரி செய்வதற்குப் பயனில்லாமல் போகின்றன. அதனால் ஆண்டு தோறும் புதிய குதிரைகளை வாங்குவது இன்றியமையாததாகி விடுகின்றது. எனவே ஆண்டுதோறும் முஸ்லீம் நாடுகளைச் சேர்ந்த வணிகர்கள் மாபாருக்குக் குதிரைகளைக் கொண்டு வருகிறார்கள் (நீலகண்ட சாஸ்திரி, தென்னிந்தியாவைப் பற்றி வெளிநாட்டினர் குறிப்புகள் 276). குதிரைக்கு லாடம் கட்டுபவர்களும் இங்கே இல்லை. குதிரை வணிகர்கள் இலாடக்காரர்களை அழைத்துக் கொண்டு வருவதில்லை. லாடக்காரர் யாதேனும் வர முயன்றாலும் அவர்களை வணிகர்கள் தடுத்து விடுகிறார்கள். அப்படிச் செய்யாவிட்டால் குதிரை வாணிகம் குறைந்து போகுமென்று அவர்கள் அஞ்சினார்கள். அந்த வாணிகத்தில் அவர்களுக்கு ஆண்டுதோறும் பெரும் பொருள் கிடைத்தது. அந்த லாபத்தை இழப்பதற்கு அவர்கள் விரும்பவில்லை. குதிரைகளை அவர்கள் கப்பலில் ஏற்றிக் கொண்டு வந்தார்கள் என்று மார்கோபோலாவும் குறிப்பிட்டுள்ளார் (நீலகண்ட சாஸ்திரி, தென்னிந்தியாவைப் பற்றி வெளிநாட்டினர் குறிப்புகள் 273 274).

விஜயநகரப் பேரரசு (கி.பி. 14 - 16)

பாண்டியர் ஆட்சியின் இறுதிக் காலத்தில் அடுத்தடுத்து வடஇந்திய இஸ்லாமியர்களின் படையெடுப்புக்கு ஆளானது. கி.பி. 1311இல் மாலிகாபூரும், 1318இல் குஷ்ருகானும், 1323இல் முகமது பின் துக்ளக்கும் படையெடுத்தனர். துக்ளக் பரம்பரையினரின் ஆட்சி டெல்லியில் நிலவியபோது அதன் 23வது மாநிலமாக தமிழகம் (தென்னிந்தியா) ஆனது. 1378 வரை இந்நிலை நீடித்தது. கி.பி. 1378இல் விஜயநகரப் பேரரசை நிறுவிய இரு சகோதரர்களில் ஒருவராகிய புக்கன் என்பவனின் மகன் குமாரகம்பனன் என்பவன் மதுரையின் மீது படையெடுத்து விஜயநகரப் பேரரசின் ஆட்சியை நிறுவினான். இதன்பின் தமிழகம் விஜயநகரப் பேரரசின் நேரடி ஆட்சியின் கீழ் வந்தது. பதிமூன்றாம் நூற்றாண்டில் மறைந்து போன சோழப் பேரரசின் ஆட்சிமுறையே பெரும்பாலும் பாண்டியர் ஆட்சியில் தொடர்ந்தது. ஆனால் விஜயநகரப் பேரரசு புதிய ஆட்சியமைப்பையும், நிறுவனங்களையும் தோற்றுவித்தது. மதுரை, தஞ்சை, செஞ்சி, வேலூர் என நான்கு மண்டலங்கள் உருவாயின. இவற்றை நிறுவகிக்க மண்டலாபதி என்ற அதிகாரி நியமிக்கப்பட்டார். தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக நிலவிய கிராம ஆட்சிமுறை ஒழிக்கப்பட்டது. சாதி வேற்றுமையும், தீண்டாமையும் இறுக்கமாயின. அடிமைமுறை பரவலாகியது. சைவமும், வைணவமும் செல்வாக்குப் பெற்றன. அதே நேரத்தில் சைவர்களுக்கும், வைணவர்களுக்குமிடையே சமயப் பூசல்கள் உருவாயின.

நில அளவுகோலை மாற்றி நிலத்தை அளந்ததன் விளைவாக நிலத்தின் பரப்பு அதிகரித்து வரியளவு உயர்ந்தது. நிலக்குத்தகைத் தொகையை உயர்த்தினர். விஜயநகர ஆட்சிக் காலத்தில் வரிப்பளு அதிகரித்தது. பரம்பரை நிலக்கிழார்களான பிராமணர்களும், வெள்ளாளர்களும் விஜயநகரப் பேரரசின் அதிகாரிகளும் உழுகுடிகளைக் கொண்டு நிலங்களைப் பயிரிட்டனர். ஆனால் உழுகுடிகளுக்கும், கைவினைஆர்களுக்கும் உரிய பங்கைக் கொடுக்கத் தவறினர். இதன் காரணமாக மக்கள் வலங்கை. இடங்கை என்ற பிரிவுகளைக் கடந்து நின்று காணியாளர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் எதிராக கிளர்ந்து எழுந்தனர். தஞ்சை மாவட்டத்தில் கொருக்கை என்ற ஊரில் கிடைத்துள்ள கி.பி. 1429ம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்றில் நாம் மண்டலம் சேர இனம் ஒத்து இராதபடி ஆலே அல்லோ இப்படி நம்மை அநியாயம் செய்கிறார்கள் என்று இடம் பெற்றுள்ள செய்தி மக்கள் ஒன்றுபட்டுப் போராடியதைக் குறிப்பிடுகின்றது.

நாயக்கர் காலம்

கி.பி. 1529இல் தொடங்கி 1736 வரை மதுரை நாயக்கர் ஆட்சி நிலவியது. நாயக்கர் ஆட்சியில் பாளையப்பட்டுமுறை என்ற ஆட்சி முறை கி.பி. 1535இல் உருவானது. இதன்படி 72 பாளையங்கள் உருவாக்கப்பட்டன. ஒவ்வொரு பாளையமும் பாளையக்காரன் ஒருவனால் நிறுவகிக்கப்பட்டது. ஏற்கனவே குறுநல மன்னர்களாக இருந்த தமிழர்கள் மட்டுமின்றி கன்னட, தெலுங்கர் பாளையக்காரர்களாக நியமிக்கப்பட்டனர். ஒவ்வொரு பாளையங்காரரும் தன் ஆளுகைக்குட்பட்ட பாளையங்களில் வரிவசூல் செய்யவும் வழக்குகளை விசாரித்து நீதி வழங்கவும் உரிமையுடையவர்களாயிருந்தனர். நாயக்கர் மன்னர்கள் நிகழ்த்தும் படையெடுப்பின் போது தங்கள் சொந்தப் படையை பாளையக்காரர் அனுப்புவது கட்டாயமாக இருந்தது. பாளையத்திலிருந்து கிடைக்கும் வருவாயில் மூன்றில் ஒரு பங்கு நாயக்க மன்னருக்கும், மற்றொரு பங்கு பாளையக்காரரின் படைவீரர்களின் செலவுக்கும் எஞ்சிய ஒரு பகுதி பாளையக்காரரையும் சென்றடைந்தது.

நாட்டின் மைய ஆட்சி அதிகாரம் நாயக்க மன்னர்களிடம் இருந்தது. அரசனை அடுத்திருந்த உயர் அதிகாரி தளவாய் என்றழைக்கப்பட்டார். இவரை அடுத்திருந்தவர் பிரதானி, இவர் நீதி வழங்கும் பணியையும் மேற்கொண்டிருந்தார். இவரை அடுத்த பதவி ராயசம் என்பதாகும். இம்மூன்று பதவிகளும் முக்கியமான பதவிகளாக இருந்தன.

நிலவரியே அரசின் முக்கிய வருவாயாக இருந்தது. நிலங்கள் தரவாரியாகப் பிரிக்கப்பட்டு வரி விதிக்கப்பட்டது. வீடு, குடியிருப்பு மனை, தோட்டம், கால்நடைகள் ஆகியனவற்றிற்கு சொத்துவரி விதிக்கப்பட்டது. கருமார் (கொல்லர்), தச்சர், குயவர், நெசவாளர் போன்ற கைவினைஆர்களிடமிருந்து தொழில்வரி வாங்கப்பட்டது. பரத்தையரும் தொழில்வரி செலுத்தியுள்ளார்கள். படைவீரர் பராமரிப்பிற்கென்று அவ்வப்போது வரிவாங்கப்பட்டது. நன்செய் நிலவரி நெல்லாயம் என்ற பெயரில் நெல்லாகவே வாங்கப்பட்டது. புன்செய் நில வரிகளும் ஏனைய வரிகளும் பொன்னாக வாங்கப்பட்டது.

நாயக்க மன்னர்கள் வைணவர்கள், என்றாலும் பிற சமயங்களை மதித்தனர். சைவ, வைணவ வேறுபாடின்றி கோவில்களுக்குத் திருப்பணி செய்தனர். இவர்கள் ஆட்சியில்தான் கத்தோலிக்க கிறித்துவம் தமிழ்நாட்டில் கால் கொண்டது. தத்துவ போதகர் என்றழைக்கப்படும் ராபர்டிநொபிலி என்பவர் தம் சமயத்தை பரப்ப வேறுபாடான ஒரு முறையை மேற்கொண்டார்.

சோழர் காலத்தைப் போன்றே நாயக்கர் காலத்திலும் வடமொழிக் கல்வியே முக்கியத்துவம் பெற்றது. வெற்றி வேற்கை என்னும் நறுந்தொகை, நைடதம், என்ற இலக்கியங்கள் அதிவீரராம பாண்டியன் என்பவரால் எழுதப்பட்டன. வரதுங்கராம பாண்டியன் திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி திருக்கருவைக் கலித்துறை அந்தாதி என்ற நூல்களையும், மாரனலங்காரம் என்ற நூலை திருக்குருகைப் பெருமாள் கவிராயர் என்பவரும், சுப்பிரதீபக் கவிராயர் கூளப்பநாயக்கன் காதல், கூளப்பநாயக்கன் விறலிவிடுதூது என்றும் நூல்களையும் இயற்றியுள்ளனர். 1. அழகர் அந்தாதி, 2. திருவரங்கக் கலம்பகம், 3. திருவரங்கத்தந்தாதி, 4. திருவரங்கத்துமாலை, 5. திருவரங்கத்து ஊசல், 6. திருவேங்கடத்தந்தாதி, 7. திருவேங்கடமாலை, 8. நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி என்ற எட்டு நூல்களும் அஷ்டப் பிரபந்தம் எனத் தலைவர்களால் போற்றப்படுகின்றன. இவற்றை எழுதிய பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் திருமலைநாயக்கர் காலத்தவர். மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் எழுதிய குமரகுருபரர், சீறாப்புராணம் பாடிய உமருப் புலவர், குற்றாலக் குறவஞ்சி பாடிய திருகூடராசப்பக் கவிராயர் ஆகியோர் நாயக்கர் காலத்தில் வாழ்ந்த குறிப்பிடத்தக்க கவிஞர்களாவர்.

ஐரோப்பியர் காலம் (1533 -1947)

கி.பி. 1533இல் முத்துக்குழித்துறை கடற்கரைப் பகுதியில் உள்ள தூத்துக்குடி நகரில் வாணிபத்திற்காக வந்து தங்கியிருந்த அரேபிய மூர்களுக்கும் நெய்தல் நிலத் தொல்குடியினரான பரதவர்களுக்குமிடையே மோதல் நிகழ்ந்தது. இம்மோதலில் பரதவர்கள் மிகக் கொடூரமான முறையில் ஒடுக்கப்பட்டார்கள். இதிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ளும் வழிமுறையாக கொச்சி நகரிலிருந்த போர்ச்சுக்கீசியரின் உதவியைப் பரதவர்கள் நாடினர். பரதவர்களுக்குத் தங்கள் கடற்படை துணையுடன் உதவ முன் வந்த போர்ச்சுக்கீசியர்கள் தங்கள் உதவிக்குக் கைமாறாக கத்தோலிக்கர்களாக மதம் மாறும்படி அவர்களை வேண்டினர். அதற்கு உடன்பட்ட பரதவர்கள் மதம் மாறியதுடன் போர்ச்சுக்கீசிய மன்னனின் குடிகளாகவும் தங்களை மாற்றிக் கொண்டனர். இதன் விளைவாக வடக்கே வேதாளை தொடங்கி தெற்கே கன்னியாகுமரி வரையிலான கடற்கரைச் சிற்றூர்கள் போர்ச்சுக்கீசியரின் கட்டுப்பாட்டிற்குள் வந்தன.

வெகு திரளான மதமாற்றம் சில புதிய வரவுகளை தமிழ்மொழிக்கு வழங்கியது. அண்டிரீக் என்ற போர்ச்சுக்கீசிய சேசுசபைத் துறவி பரதவர்களின் நிதி உதவி பெற்று கி.பி. 1567இல் தம்பிரான் வணக்கம் என்ற நூலையும், 1568இல் கிறிஸ்டியாவின் வணக்கம் என்ற நூலையும் முறையே அம்பலக்காட்டிலும் கொல்லத்திலும் அச்சிட்டு வெளியிட்டார். இந்திய மொழிகளிலேயே முதன்முதலாக அச்சு வடிவம் பெற்ற மொழி என்ற பெருமையை இந்நூல்களின் வாயிலாகத் தமிழ்மொழி பெற்றது. தூத்துக்குடி அருகில் உள்ள புன்னக்காயல் என்ற கடற்கரைச் சிற்×ரில் அடியார் வரலாறு என்ற நூலை 1586இல் இவர் அச்சிட்டு வெளியிட்டார். போர்ச்சுக்கீசிய மொழியில் தமிழ் இலக்கண நூல் ஒன்றையும் இவர் வெளியிட்டுள்ளார். தற்கால மருத்துவமனை ஒன்றையும் புன்னக்காயலில் இவர் நிறுவினார்.

கி.பி. 1658இல் டச்சுக்காரர்கள் போர்ச்சுக்கீசியர்களிடமிருந்து தூத்துக்குடி நகரைக் கைப்பற்றினர். தூத்துக்குடி நகரில் நெசவாளர்களைக் குடியமர்த்தி அவர்கள் நெய்த கச்சைத் துணிகளை இலங்கைக்கு ஏற்றுமதி செய்தனர். ப்ராட்டஸ்டண்ட் பிரிவைச் சார்ந்த டச்சுக்காரர்கள் தங்கள் சமயத்தை இங்கு பரப்ப முயற்சி செய்தனர். ஆனால் இம்முயற்சியில் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. "ஐரோப்பாவில் நிகழ்ந்த யுத்தங்கள் இந்தியாவில் டச்சுக்காரர்களின் தலைவிதியை நிர்ணயம் செய்தன என்ற கூற்றிற்கு ஏற்ப இங்கிலாந்திடம் ஐரோப்பிய யுத்தம் ஒன்றில் தோற்றுப் போன டச்சுக்காரர்கள் ஒப்பந்தம் ஒன்றின் மூலம் தூத்துக்குடி உள்ளிட்ட கடற்கரை கிராமங்களின் உரிமையை ஆங்கிலேயரிடம் தந்தனர்.

மைசூரை ஆண்டு வந்த நிஜாமின் கட்டுப்பாட்டின் கீழிருந்த ஆர்காடு நவாப் அதிலிருந்து விடுபெற்று சுயேச்சை மன்னனாக செயல்படத் தொடங்கினார். முதல் இரண்டு கருநாடகப் போர்களின் வாயிலாகத் தமிழ்நாட்டில் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனியார் மைசூர் போர்களின் வாயிலாக தென்னிந்தியாவில் தங்களை நிலைநிறுத்திக் கொண்டனர். மதுரை நாயக்கர் உருவாக்கிய பாளையக்காரர்கள் சுயேச்சை மன்னர்கள் போல் செயல்படத் தொடங்கினர். இத்தகைய சூழலில் பாளையக்காரரிடம் வரி வாங்கும் உரிமையை கி.பி. 1781இல் நவாப்பிடமிருந்து கிழக்கிந்திய கம்பெனி வாங்கியது. இதன் அடிப்படையில் அவர்கள் வரி வாங்கும்போது, பூலித்தேவர், கட்டபொம்மன், ஊமைத்துரை, மருதுபாண்டியர், தீர்த்தகிரி (தீரன் சின்னமலை) ஆகியோர் வரிதர மறுத்துப் போராடி ஆங்கிலேயர்களால் கொல்லப்பட்டனர். அந்நிய ஆட்சிக்கு எதிராகத் தெளிவான கொள்கைகளை முன்வைத்துப் போராடவிட்டாலும் இவர்களுடைய உறுதியான வீர உணர்வும், வெள்ளையர் எதிர்ப்புணர்வும் பாராட்டுதலுக்குரியன. 1806இல் வேலூரில் சிறை வைக்கப்பட்டிருந்த திப்புசுல்தானின் மகன்களின் ஆதரவுடன் நிகழ்ந்த வேலூர்க் கலகம் (வேலூர் எழுச்சி) வெள்ளையர் எதிர்ப்புப் போராட்டத்தில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இந்நிகழ்வுகளுக்குப் பின்னர் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிர்ப்பில்லாமல் போய்விட்டது.

சென்னை மாகாணம் என்ற பெயரில் இன்றையக் கன்னியாகுமரி மாவட்டம், நெல்லை மாவட்டத்திலுள்ள செங்கோட்டைத் தாலுகா, புதுக்கோட்டை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் நீங்கலாக ஏனைய பகுதிகள் முழுவதிலும் கிழக்கிந்திய கம்பெனியின் நேரடி ஆட்சி நிலவியது. கன்னியாகுமரி மாவட்டம் செங்கோட்டைத் தாலுகா ஆகியன திருவிதாங்கூர் மன்னர் ஆட்சிப் பகுதியாகவும் புதுக்கோட்டை மன்னரின் ஆளுகையின் கீழ் புதுக்கோட்டைப் பகுதியும் விளங்கின. மேலும் இன்றையக் கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களின் பகுதிகள் சிலவும் சென்னை மாகாணத்துடன் இணைந்திருந்தன.

சென்னை மாகாணத்தின் தலைநகராகச் சென்னை விளங்கியது. ஆட்சித் தலைவராகக் கவர்னர் இருந்தார். சென்னை மாகாணம் 25 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு மாவட்டத்தின் தலைவராகக் கலெக்டர் நியமிக்கப்பட்டார். ஒவ்வொரு மாவட்டமும் பல தாலுகாக்களையும் தாலுகாக்கள் பிர்காக்கள் என்ற பிரிவுகளையும் கொண்டிருந்தன. தாலுகாவின் தலைவராக தாசில்தார் நியமிக்கப்பட்டார். தொடக்கத்தில் மாவட்ட நீதிபதியிடம் ஒப்படைக்கப்பட்ட குற்ற விசாரணை பொறுப்பு பின்னர் மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைக்கப்பட்டது.

பண்டைத் தமிழ்நாட்டைப் போன்று கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியிலும் அரசின் முக்கிய வருவாயாக நிலவரியே இருந்தது. தனி நிலவுடைமை அனுமதிக்கப்பட்டு அவ்வுடையாளர்களிடமிருந்து நேரடியாக வரி வாங்கப்பட்டது. இதை இரயத்துவாரி முறை என்றழைத்தனர். பாளையக்காரர்கள் என்ற பெயர் மாறி ஜமீன்தார்கள் என்ற பெயர் உருவானது. ஜமீன்தார்களும், ஜாகீர்தர்கள், மிட்டாதாரர்களும் குறிப்பிட்ட நிலப்பகுதிகளுக்கு உரிமை பெற்று, பயிரிடுவோரிடமிருந்து வரி வாங்கினர். ஒரு பகுதி வரியை எடுத்துக் கொண்டு எஞ்சியதைக் கிழக்கிந்திய கம்பெனியாரிடம் வழங்கினர்.

ஆங்கிலேயரின் பொருளாதாரச் சுரண்டல் தமிழகத்தை வெகுவாகப் பாதித்தது. உணவு தானியங்கள் உற்பத்திக்கு மாற்றாகப் பணப் பயிர்களைப் பரந்த அளவில் பயிரிடச் செய்தனர். குறிப்பாக இங்கிலாந்தின் நெசவாலைகளுக்கு அடிப்படைத் தேவையான பருத்தியையும், நூல்களுக்குச் சாயமேற்ற உதவும் அவுரியையும் அதிக அளவில் பயிரிடச் செய்தனர். அதே நேரத்தில் அவற்றிற்கு அவர்களே விலை நிர்ணயம் செய்தனர். தமிழ்நாட்டு உழவன், தான் உற்பத்தி செய்த பொருளுக்கு விலை நிர்ணயம் செய்யும் உரிமையை இழந்தான். இதை,

ஊரான் ஊரான் தோட்டத்திலே
ஒருத்தன் போட்டானாம் வெள்ளரிக்கா
காசுக்கு ரெண்டா விக்கச் சொல்லி
காயிதம் போட்டானாம் வெள்ளக்காரேன்

என்ற நாட்டார் பாடல் எடுத்துரைக்கிறது.

1857 சிப்பாய் எழுச்சிக்குப் பின்னர் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சிக்குப் பதிலாக இங்கிலாந்து பாராளுமன்றத்தின் நேரடி ஆளுகையின் கீழ் தமிழ்நாடு வந்தது. 1859 ல் இந்திய சிவில் சட்டமும், 1860 ல் இந்தியக் குற்றச் சட்டமும் உருவாக்கப்பட்டு நடைமுறைக்கு வந்தன. 1861 ல் உயர்நீதி மன்றம் சென்னையில் நிறுவப்பட்டது.

பாரம்பரிய கிராம சபைகளுக்கு மாற்றாக தாலுகா போர்டு ஜில்லா (மாவட்டம்) போர்டு, பஞ்சாயத்து ஆகிய நிறுவனங்கள் உருப்பெற்றன. பாரம்பரிய பள்ளிகளுக்கு மாற்றாக நவீனக் கல்விக் கூடங்கள் அரசினராலும், கிறித்தவ மிஷனரிகளாலும், தனிப்பட்டவர்களாலும், சாதியமைப்புகளாலும் நிறுவப் பெற்றன. இக்கல்வி நிறுவனங்களுக்கு அரசு மானியமும் கிட்டியது. சாதிய எல்லைகளைத் தாண்டி அனைவரும் கல்வி கற்கும் வாய்ப்பு இப்போதுதான் முதன் முதலாக உருப்பெற்றது. பெண் கல்விக்கு ஊக்கம் அளிக்கப்பட்டது. மரபுகளை மீறிப் பெண்கள் கல்வி பெறும் நிலை உருவாகத் தொடங்கியது. மாநிலக் கல்லூரி ஒன்றும், 1834இல் பொறியியல் கல்லூரி ஒன்றும், 1835இல் மருத்துவக் கல்லூரி ஒன்றும் சென்னையில் தொடங்கப்பட்டது. 1857 ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைக்கழகம் நிறுவப் பெற்றது. இந்நவீனக் கல்வியானது படித்த மக்கள் கூட்டத்தை உருவாக்கியது. இதன் விளைவாகப் பத்திரிகைகள் சில உருப்பெற்றன. மதராஸ் கெஜட், கூரியர் என்ற பத்திரிகைகள் வெளியிடப்பட்டன. 1878 செப்டம்பரில் இந்து என்ற ஆங்கில நாளேடும் 1878 டிசம்பரில் மதராஸ் மெயில் என்ற ஆங்கில நாளேடும் வெளி வந்தன. 1880 ல் சுதேசமித்திரன் என்ற தமிழ் நாளேடு வெளியானது. செய்யுள் வடிவங்களின் வாயிலாகவே பொதுமக்களிடம் கருத்துப் பரிமாற்றம் நிகழ்ந்து வந்த முறை மாறி உரைநடை செல்வாக்குப் பெற்று வளரத் தொடங்கியது. அச்சு இயந்திரத்தின் வருகையின் காரணமாகப் பழைய தமிழ் இலக்கிய இலக்கண நூல்கள் அச்சு வடிவம் பெறத் தொடங்கின. சிறுகதை, நாவல் என்ற புதிய இலக்கிய வடிவங்கள் தமிழில் உருவாயின.

தமிழ்நாட்டை ஆண்ட மன்னர்கள் பலரும் வேளாண்மையின் அடிப்படை தாரமான நீர்வளத்தைப் பெருக்குவதிலும், பேணுவதிலும் ஆர்வம் காட்டினர். ஆனால் ஆங்கிலேயர்கள் முழுமையாக ஆர்வம் காட்டவில்லை. மேலும் உணவு தானியங்களை வரைமுறையின்றி ஏற்றுமதி செய்தனர். இதன் விளைவாக 1876 1878 ஆண்டுகளில் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. தாது வருஷப் பஞ்சம் என்று மக்கள் இதை அழைத்தனர். பஞ்சமோ பஞ்சம் என்று பரிதவித்து மக்கள் பல்லாயிரக் கணக்கில் மாண்டனர்.

காட்டுப் பக்கம் நூறு பிணம் ஓ சாமியே
வீட்டுப் பக்கம் நூறு பிணம் ஓ சாமியே
ரோட்டுப் பக்கம் நூறு பிணம் ஓ சாமியே
மேட்டுப் பக்கம் நூறு பிணம் ஓ சாமியே

என்று நாட்டார் பாடல் ஒன்று எடுத்துரைக்கிறது. இப்பஞ்சத்தையும் ஆங்கிலேயர்கள் தங்கள் சுரண்டலுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். பஞ்சத்தில் வாடிய மக்களுக்கு குறைந்த அளவு கூலி கொடடுத்து இரயில் பாதைகளும், கால்வாய்களும் அமைத்தனர். சென்னையில் ஓடும் பக்கிங்காம் கால்வாயின் ஒரு பகுதி இந்த முறையில்தான் வெட்டப்பட்டது. பஞ்சத்தின் துணை விளைவாக ஆங்கிலேயர்களின் இதர குடியேற்ற நாடுகளான இலங்கை, பர்மா (மியாமர்), மலேசியா, பிஜி தீவு, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கும் ஒப்பந்தக் கூலிகளாகச் சென்று தேயிலை, காப்பி, இரப்பர் தோட்டங்களை உருவாக்கினர். ஆனால் அவர்கள் எதிர்பார்த்த வளமான பொருள் கிட்டவில்லை. கூலித் தமிழன் என்ற பெயர்தான் கிட்டியது.

19ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் இந்திய தேசிய காங்கிரஸ் தமிழ்நாட்டில் நிலை பெற்றது. 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வ.உ.சி. பாரதி, சிவா ஆ கியோரின் தலைமையில் சுதேசிய இயக்கம் வீறு கொண்டு எழுந்தது. 1920இல் நிகழ்ந்த ஒத்துழையாமை இயக்கமும், 1930இல் உருவான சிவில் சட்ட மறுப்பு இயக்கமும், 1942இல் நிகழ்ந்த வெள்ளையனே வெளியேறு போராட்டமும், தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்க அளவில் நிகழ்ந்தன. வள்ளலார் உருவாக்கிய சமரச சுத்த சன்மார்க்க இயக்கம், வைகுண்ட சாமியின் அய்யாவழி இயக்கம், தென்னிந்திய நலவுரிமைச் சங்கமாக உருவாகி நீதிக் கட்சியாக மாறி சுயமரியாதை இயக்கமாக வளர்ந்த திராவிட இயக்கம், பொதுவுடைமைக் கட்சியினர் உருவாக்கி வளர்த்த உழவர், தொழிலாளர் இயக்கங்கள் ஆகியன தமிழ்நாட்டின் இயக்கங்கள் என்ற தலைப்பில் தனியாக ஆராய்வதற்குரியன.

தமிழர் வரலாறு

26.07.1004 திங்கள் 1. வரலாறு குறித்த வரையறைகள் - வரலாற்று

அணுகுமுறைகள் - தமிழர் வரலாறு - தமிழர் வரலாற்றுக்கான தரவுகள்

2. இனக்குழு வாழ்க்கை

27.07.2004 செவ்வாய் 3. மேய்ச்சல் நில வாழ்க்கை

4. அடிமை முறை

28.07.2004 புதன் 5. நிலவுடைமையின் தோற்றமும் வளர்ச்சியும்

29.07.2004 வியாழன் 6. காலனியத்தின் வருகை - அதன் விளைவுகள்

7. விடுதலை இயக்கமும் தேசிய இயக்கமும்

30.07.2004 வெள்ளி 8. முதலாளித்துவத்தின் தோற்றமும் வளர்ச்சியும்

31.07.2004 சனி 9. சமூக மற்றும் எதிர்ப்பு இயக்கங்கள் (பார்ப்பனிய

எதிர்ப்பு, அதன் பல்வேறு வடிவங்கள் தலித் எழுச்சி)

வாங்க நாமும் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தலாம் எப்படி?


உடல் பருமன் : நமது நாட்டில் மட்டுமல்ல இன்று உலகில் உள்ள தலையாய பிரச்சனை உடல் பருமன். இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அய்யோ உடம்பு வந்துருச்சே குறைக்க முடியவில்லையே இது தான் புலம்பல் ஏன் வந்தது அதை வரும் முன் காக்க என்ன வழி இதையாரும் யோசிப்பதில்லை யோசிக்கும் போது உடல் வெயிட் ஆகிவிடுகிறது. இதில் பாதிக்கப்படுபவார்கள் கிராமப்புரத்தை விட நகரவாசிகள் தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.


உடல் பருமன் ஆவதற்கு ஒரு முக்கிய காரணம் கொலஸ்ட்ரால். இந்த கொலஸ்டிரால்ல நன்மையும் இருக்கு, தீமையும் இருக்கு இதைதாங்க எழுதியிருக்கேன் படியுங்க எனக்கு தெரிந்த அளவு நான் படித்த அளவு எழுதியிருக்கிறேன் பின்னூட்டத்தில் உங்க விமர்ச்சனத்தை சொல்லுங்க. கொலஸ்ட்ரால்: கொலஸ்டிரால் என்பது ஈரலில் உற்பத்தியாகும் ஒரு மெழுகு போன்ற பொருள். இது சில வகை உணவுகளிலும் காணப்படுகிறது. இது வைட்டமீன் – டீ மற்றும் சில ஹார்மோன்கள், செல்லின் சுவர் மற்றும் பித்த உப்புகள் உற்பத்திக்கு தேவைப்படுகிறது


. இந்த உப்புகள் கொழுப்பை ஜீரணிக்க உதவுகிறது. உடலானது தேவையான அளவு கொலஸ்டிராலினை உற்பத்தி செய்கிறது. எனவே வேறு கொலஸ்டிரால் உடைய உணவை உண்ணாமல் இருந்தால் நல்லது. ஆனால் உணவில், கொலஸ்டிராலை முழுமையாக தவிர்ப்பதென்பது கடினமானமாகும். ஏனெனில் பல உணவுகள் இதனை தன்னுள் கொண்டுள்ளன. உடலில் அதிகளவு கொலஸ்டிரால் என்பது இதய நோய்கள் போன்ற மோசமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். பல காரணிகள் உயர் அளவு கொலஸ்டிரால் ஏற்பட பங்களிக்கிறது, ஆனால் சில செயல்கள் மூலம் இதனை கட்டுப்படுத்தலாம்.


* கொலஸ்டிரால் அளவு உங்கள் உடலில் உள்ள எச்டிஎல் கொலஸ்டிரால் அளவு (நல்ல கொலஸ்டிரால்) மற்றும் எல்டிஎல் கொலஸ்டிரால் அளவு (கெட்ட கொலஸ்டிரால்) களை பொறுத்துள்ளது. எல்டிஎல் கொலஸ்டிராலைவிட எச்டிஎல் கொலஸ்டிரால் உடலில் அதிகளவு இருப்பது உடலில் உள்ள சுகாதாரமான கொலஸ்டிரால் அளவை பேண மிக முக்கியமாகும்.


* உடலில் நல்ல கொலஸ்டிராலலின் அளவை அதிகரிக்க, உங்கள் உணவில் எந்த வகையான கொழுப்புகள் உள்ளன என்பதனை கவணியுங்கள், குறிப்பாக ட்ரான்ஸ் பாட் (அன்சாச்சுரேட்டெட் பாட்) டினை தவிர்ப்பது நல்ல வழியாகும்.


* இதய இரத்தநாள பயிர்ச்சிகளை ஒழுங்காக செய்வது, உணவில் குறைந்த அளவு கொலஸ்டிராலினை எடுத்துக்கொள்வது மற்றும் புகைக்காமல் இருப்பது போன்றவை உடலில் கெட்ட கொலஸ்டிரால் சேர்வதை அகற்றும் பிறவழிகளாகும்.


கொலஸ்டிரால் உள்ளவர்கள் எதை சாப்பிடலாம் எதை தவிர்க்கலாம் :


* வறுத்தல், பொரித்தலுக்கு எண்ணெய் குறைவாகத் தேவைப்படும் "நான்-ஸ்டிக்' பானைப் பயன்படுத்துங்கள். உறையாத எண்ணெய் வகைகளான சூரிய காந்தி எண்ணெய், நல்லெண்ணெய், கடலை எண்ணெய் போன்றவற்றில் ஏதாவது இரண்டு எண்ணெய்களைச் சேர்த்து அளவோடு சமையலுக்குப் பயன்படுத்துங்கள். மொனொ அன்ஸேச்சுரேடெட் எண்ணெய் மற்றும் பாலி அன்ஸேச்சுரேடெட் எண்ணெய்கள், சமையலில் உபயோகிக்க வேண்டும். அவற்றையும் குறைந்த அளவில்தான் உபயோகிக்க வேண்டும்.


* கொலஸ்டிரால் என்பது வேறு; கொழுப்புச் சத்து என்பது வேறு. "கொலஸ்டிரால் இல்லாத எண்ணெய் போன்ற விளம்பரங்களைப் பார்த்து மயங்கி, குறிப்பிட்ட எண்ணெய்யை வாங்கிப் பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் தாவர வகைகளிலிருந்து பெறப்படும் எந்த எண்ணெயிலும் கொலஸ்டிராலுக்கு இடமில்லை. பிராணிகளிடமிருந்து கிடைக்கும் பால் மற்றும் பால் சார்ந்த பொருள்களான வெண்ணெய், நெய் போன்றவற்றில் மட்டுமே கொலஸ்டிரால் உண்டு.


* பழைய எண்ணெய்யை சூடுபடுத்தி மீண்டும் பூரி போன்றவை செய்ய பயன்படுத்தக் கூடாது. பழைய எண்ணெய்யை தாளிக்க பயன்படுத்தலாம்.


* ஒலிவ எண்ணெய் (ஜைத்தூன் எண்ணெய்) யில் அதிக அளவு ஆன்டி ஆக்ஸிடன்ஸ்(antioxidants) உள்ளது. இது LDL எனப்படும் கெட்ட கொலெஸ்ட்ராலை குறைக்க பெரிதும் உதவுகிறது. FDA பரிந்துரைப் படி தினமும் 2 மேஜைக்கரண்டி (23 Gram) ஆலிவ் எண்ணெய் இதயத்துக்கு மிக நல்லதாம்.


* தேங்காயில் உள்ள fatty Acid உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது, உடல் எடையை குறைக்கிறது என சமீபத்திய ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. தேங்காய் எண்ணெயில் கொழுப்பு உள்ளது, சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் இதை தொடக்கூடாது என்ற கருத்தை இது பொய்யாக்குகிறது. தேங்காய் எண்ணெயில் "medium chain Fatty Acid" அதிகமாக உள்ளது. உடலில் உள்ள கொழுப்புச் சத்தை குறைக்கும் Capric Acid,மற்றும் 'Lauric Acid' ஆகிய இரு அமிலங்களும் போதிய அளவு உள்ளது. இதனால் தினமும் போதிய அளவு தேங்காய் எண்ணெய் உணவில் சேர்த்து வந்தால் உடல் எடை குறையுமாம்.


* எருமைப் பாலில் கொழுப்பு அதிகம். பசும்பால் நல்லது. கொழுப்புச் சத்து குறைந்த ஸ்டாண்டர்டைஸ்டு பால் இதய நோயாளிகளுக்கு நல்லது. கொழுப்புச் சத்து அறவே நீக்கிய பாலும் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. அதை வாங்கிப் பயன்படுத்தலாம்.


* அசைவ உணவு வகைகளில் ஆட்டுக்கறி, மாட்டுக் கறி, பன்றிக் கறி ஆகிய மூன்றிலும் அதிகம் உள்ளது. * முட்டையின் மஞ்சள் கருவிலும் கொலஸ்டிரால் அதிகம்.ஆனால் முட்டையை அளவுடன் சாப்பிட்டால், இதயத்துக்கு எந்த விதமான கெடுதலையும் செய்யாது என ஹார்வார்டு பள்ளி தெரிவிக்கிறது.


* அசைவ உணவு சாப்பிடுவோர், ஆடு-கோழி போன்றவற்றின் ஈரல், சிறுநீரகம், மூளை போன்றவற்றை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் ஆடு-கோழி ஆகியவற்றின் உறுப்புகளில் கொழுப்புச் சத்து அதிகம்.


* கொட்டை வகைகள்:


முந்திரிப் பருப்பு, வேர்க்கடலை, எள் போன்றவற்றில் கொழுப்புச் சத்து அதிகம்; இதனால் கலோரிச் சத்து அதிகம். எனவே இதய நோயாளிகள் இத்தகைய உணவைத் தவிர்க்க வேண்டும்.


* வால் நட்டில் அதிக அளவு பாலி அன் சேச்சுரேட்டட் அமிலக் கொழுப்பு உள்ளது. இது கொலெஸ்ட்ராலை குறிப்பிடத்தக்க அளவு குறைக்கிறது. பாதாமும் இதைப் போல் குணமுடையது


* பாதாம் பருப்பை இரண்டு அல்லது மூன்று என்ற எண்ணிக்கையில் மட்டுமே நாள் ஒன்றுக்குச் சாப்பிடலாம்.


* ஸேடுரேடெட் கொழுப்பு அதிகம் உள்ள உணவைத் தவிர்க்க வேண்டும் * எண்ணெயில் பொரித்துண்ணும் உணவுகளை, பொறிப்பதற்கு பதிலாக வேகவைத்ததோ, சுட்டோ, வதக்கியோ சாப்பிடப் பழக வேண்டும்.


* கொழுப்பு நீக்கிய பால் (skimmed milk) அல்லது குறைந்த கொழுப்புள்ள பால் (low fat milk), வெண்ணெய் மற்றும் தயிரை உபயோகிக்க வேண்டும்.


* டோனட்ஸ் (Dough nuts), மஃப்பின்ஸ்(muffins) போன்ற pastry பாஸ்ட்ரி வகை துரித உணவு(fast food)களைத் தவிர்க்க வேண்டும்.


* பழவகைகள், காய்கறிகள், பருப்புகள், தானியங்கள், ரொட்டி, அரிசி மற்றும் பாஸ்டா உணவுகள் உண்ண வேண்டும்.


* வெண்ணையைத் தவிர்த்து, திரவ நிலையிலான மார்கரின் பயன்படுத்தலாம்.


* உணவுப் பொருட்களில் உள்ளக் கொழுப்பின் அளவை, அவற்றின் குறிப்பேட்டைப் படித்துத் தெரிந்து கொள்ளவது கூடுதலாக உள்ளக் கொழுப்பு உணவைத் தவிர்க்க உதவும்.


* இனிப்பு உணவுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும். * நார்ச்சத்து காய்கறிகள்: நார்ச்சத்து அதிகம் சாப்பிடுவதால், ரத்தத்தில் கொழுப்பு சேருவது தாமதப்படுத்துகிறது.


* ஓட்ஸில்(Oatmeal) கரையக்கூடிய நார் சத்து இருக்கிறது .இது LDL எனப்படும் கெட்ட கொலெஸ்ட்ராலை குறைக்கிறது.கிட்னி பீன்ஸ், ஆப்பிள், பியர்ஸ், பார்லி போன்றவற்றிலும் இத்தகை கரைக்கூடிய நார் சத்து அதிகம் உள்ளது.


* வாழைப் பழத்தில் அதிக நார் சத்து உள்ளது நல்லது


-நல்லது நாம் சாப்பிடும் உணவு வகையில் கொலஸ்டிராலின் அளவு :


* முட்டை (வெண்கரு+மஞ்சட்கரு) -550 (mg /100gm)


* வெண்ணெய் -250 (mg /100gm)


* சிப்பி மீன் (Oyster)-200 (mg /100gm)


* இறால் (Shrimp)-170 (mg /100gm)


* மாட்டு இறைச்சி -75 (mg /100gm)


* ஆட்டிறைச்சி (Mutton)-65 (mg /100gm)


* கோழியிறைச்சி-62 (mg /100gm)


* பனீர் (cottage cheese)-15 (mg /100gm)


* ஐஸ் கிரீம்-45 (mg /100gm)


* நிறைக்கொழுப்புப் பால் (1 குவளை)-34 (mg /100gm)


* கொழுப்பு நீக்கிய பால் (1 குவளை)-5 (mg /100gm)


* பிரெட்-1 (mg /100gm)


* ஸ்போஞ்ச் கேக்-130 (mg /100gm)


* சாக்லேட் பால்-90 (mg /100gm)


நாமும் இதைப்பின்பற்றினால் கொலஸ்டிரால் இல்லாத மனிதனாக வாழ முயற்சிக்கலாமே......

Monday, July 19, 2010

புற்றுநோய் தீர்க்கும் தாய்ப்பால்.- தாய்பாலின் அதிசயங்கள்











தாய்ப்பாலிலுள்ள ஹேம்லெட் என்ற பொருள், 40 வகையான புற்றுநோய் செல்களை அழிக்கும் திறன் பெற்றுள்ளது என, ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.தாய்ப்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி பற்றி கண்டறிவதற்காக ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த போது, தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டது தான், ஹ்யூமன் ஆல்பா லாக்தல்பூமின் மேட் லெதல் டூ ட்யூமர்! இதன் சுருக்கம்தான், ஹேம்லெட்! மனித உடலில், ஹேம்லெட் என்ன பங்காற்றுகிறது என்பது இதுவரை கண்டறியப்படவில்லை.


சமீபத்தில், ஸ்வீடன் நாட்டின் லுண்ட் பல்கலை மற்றும் கோத்தென் பெர்க் பல்கலையின் ஆய்வாளர்கள் இணைந்து நடத்திய ஆய்வில், இந்த ஹேம்லெட் மனித உடலிலுள்ள 40 வகையான புற்றுநோய் செல்களை அழிக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆய்வின் போது, சிறுநீர்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிலருக்கு, ஹேம்லெட் கொடுக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அப்போது, சிறுநீருடன் புற்றுநோய் செல்கள் இறந்த நிலையில் வெளியேறியது கண்டறியப்பட்டது.


இதன் மூலம், புற்றுநோய்க்கான சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்படக் கூடும் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர். ஹேம்லெட் புற்றுநோய் செல்களை மட்டுமே அழிக்கிறது; மற்ற செல்களை பாதிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஹேம்லெட் எப்படி புற்றுநோய் செல்களை அழிக்கிறது என்பது குறித்து, ஆய்வு நடந்து வருகிறது. குழந்தையின் வயிற்றில் செல்லும் தாய்ப்பாலில் உள்ள, ஹேம்லெட் அங்கு, அமிலத் தன்மையை உருவாக்குகிறது. அதன் மூலமே, கேன்சர் செல்கள் அழிக்கப்படுகின்றன என்று தெரிய வந்துள்ளது.


தாய்ப்பால் குழந்தைகளுக்கு ஒவ்வாவை நோய் வரும் வாய்ப்பை குறைக்கிறது. ஒவ்வாமையினால் வரும் ஆஸ்த்மா நோயைத் தடுக்கும் சக்தி தாய்ப்பாலுக்கு இருக்கிறது குழந்தைகளுக்கு தாய்ப்பால் பல வழிகளிலும் ஆரோக்கியத்தைத் தருகின்றது. பெரும்பாலான தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு முதலில் தாய்ப்பால் கொடுக்க ஆரம்பிக்கின்றனர் ஆனால் சில வாரங்களிலேயே பல்வேறு காரணங்களைக் காட்டி நிறுத்திவிடுகின்றனர்.. இது மிகவும் தவறானதாகும்.


ஆறுமாதங்கள் முதல் ஒரு வயது வரை தாய்ப்பாலில் குழந்தைகள் வளர்வதே ஆரோக்கியமானது. தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் மருத்துவமனைகளுக்குச் செல்லும் வாய்ப்பு 80% குறைகிறது. தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் அதிக எடையுடன் வளரும் ஆபத்திலிருந்தும் தப்பிக்கிறது. குழந்தையின் தாடை வளர்ச்சிக்கும் இது பயனளிக்கிறது. குழந்தைப் பருவத்தைக் கடந்து வாலிப வயதை அடையும் போது கூட குழந்தைகள் சரியான எடையில் வளர சிறு வயதில் குடிக்கும் தாய்ப்பால் உதவுகிறது. தாய்ப்பாலை குறைந்தது முதல் ஆறுமாதங்கள் குடித்து வளரும் குழந்தைகள் நீரிழிவு நோயினின்றும் தப்பி விடுகின்றன.


குறிப்பாக குடும்பத்தில் யாருக்கேனும் நீரிழிவு நோய் இருந்தால் குழந்தைக்கு ஆறுமாதங்கள் வெறும் தாய்ப்பாலை மட்டுமே கொடுத்து வர வேண்டும். அது பரம்பரையாய் நோய் தாக்காமல் தடுக்கும் என்பது ஆனந்தமான செய்தி. தாய்ப்பால் ஆரோக்கியமான நோய் எதிர்ப்புச் சக்தியை குழந்தைகளின் உடலில் உருவாக்குகிறது. வணிக நிறுவனங்கள் தரும் எந்த சத்துப் பொருளும் தாய்ப்பாலின் குணாதிசயங்களுக்கு வெகு தொலைவிலேயே நின்று விடுகின்றன என்பதே உண்மை. வணிக நிறுவனங்கள் தங்கள் விற்பனைப் பொருட்களை பிரபலப்படுத்த தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்துமாறு ஊக்கப்படுத்து கிறது.


தாய்ப்பாலைக் குடித்து வளரும் குழந்தைகள் வலிகளைத் தாங்கும் வலிமை படைத்ததாகவும் இருக்கின்றன. . தாய்ப்பாலில் இருக்கும் அமிலத் தன்மை எண்டோர்பின் எனப்படும் வலி நிவாரணி அதிகம் சுரக்க வழி செய்வதே இதன் காரணமாம். தாய்ப்பாலில் ஒரு குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து விதமான சத்துகளும் அடங்கியிருக்கின்றன. அது இயற்கையாகவே அமைந்து விட்டதனால் மிக எளிதாக இயல்பாகவே செரிமானமாகி விடுகிறது. வயிறு தொடர்பான நோய்கள் குழந்தைகளுக்கு வருவதைத் தடுக்கிறது. குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளெனில் அவர்களுக்குத் தாய்ப்பால் கொடுப்பது மிக மிக அவசியம்.


ஆரோக்கியத்தை மீண்டெடுக்கவும், துவக்க கால சிக்கல்களிலிருந்து விடுபடவும், நீடிய ஆயுளுக்கும் அது வழி செய்யும். தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் அறிவு வளர்ச்சியில் சற்று முன்னே நிற்கின்றன. போதிய மூளை வளர்ச்சியும், சுறுசுறுப்பும் அத்தகைய குழந்தைகளுக்கு இருப்பதே இதன் காரணமாகும். குறிப்பாக கணிதவியல், பொது அறிவு, நினைவாற்றல், துல்லியமான பார்வை போன்றவற்றுக்கு தாய்ப்பால் துணை நிற்கிறது. SIDS (Sudden Infant Death Syndrome) எனப்படும் திடீர் மரணங்களிலிருந்து குழந்தைகளளக் காப்பாற்றும் சக்தி தாய்ப்பாலுக்கு உண்டு. பாலூட்டுவது குழந்தைகளுக்கு மட்டுமன்றி தாய்க்கும் பல வகைகளில் பயனளிக்கிறது.


குறிப்பாக பிரசவ காலத்திற்குப் பின் உடலின் எடை குறையவும், தேவையற்ற கலோரிகளை இழக்கவும் பாலூட்டுதல் உதவி செய்கிறது. ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்பு முறிவு நோய் வரும் வாய்ப்பையும் பாலூட்டுதல் குறைக்கிறது. பெரும்பாலான பெண்கள் தங்கள் மாதவிலக்கு காலம் முடிந்தபின் ஆஸ்டியோபோரோசிஸ் நோய்க்குள் விழுகிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. பிரசவ காலத்தில் நிகழும் உதிரப்போக்கு பாலூட்டும் தாய்மாருக்கு கட்டுக்குள் இருக்கிறது. அத்துடன் கருப்பை தன்னுடைய பழைய நிலைக்கு வருவதற்கு பாலூட்டுதல் பெருமளவு துணை நிற்கிறது. திரும்ப மாதவிலக்கு வரும் காலத்தையும் 20 முதல் 30 வாரங்கள் வரை நீட்டித்து வைக்கும் வல்லமையும் பாலூட்டுதலுக்கு உண்டு.


பாலூட்டும் தாய்க்கு மார்பகப் புற்று நோய், கருப்பை புற்று நோய் வரும் வாய்ப்புகள் பெருமளவு குறைகின்றன. தாய்க்கும் குழந்தைக்குமான உன்னதமான உறவை பாலூட்டுதல் ஆழப்படுத்துகின்றது. பிறந்த உடன் குழந்தைகளால் பன்னிரண்டு முதல் பதினைந்து இஞ்ச் தொலைவு மட்டுமே பார்க்க முடியும். அதாவது தாயின் மார்புக்கும் முகத்திற்கும் இடைப்பட்ட தூரம் ! தாய்ப்பால் கொடுக்கும் போது குழந்தை தாயின் முகத்தையே பாசத்துடன் பார்த்து பந்தத்தைப் பலப்படுத்திக் கொள்கிறது. முதல் ஆறுமாதங்கள் வரை தாய்ப்பால் கொடுப்பது குழந்தைகளை வைரஸ், பாக்டீரியா தாக்குதலிலிருந்து காப்பாற்றுகிறது.


மழலைக்காலங்களில் வரும் இத்தகைய தாக்குதல்களினால் ஏராளமான உயிரிழப்புகள் நேரிடுகின்றன என்பது கவலைக்குரிய செய்தியாகும். தாய்ப்பால் இதையனைத்தையும் எதிர்க்கும் கவசமாகச் செயல்படுகிறது. தாய்ப்பால் கொடுக்க முடியாத சூழலில் பசுவின் பால் கொடுக்கும் வழக்கம் பலருக்கும் இருக்கிறது. இது ஆபத்தானது என்கின்றனர் மருத்துவர்கள். பசுவின் பால் எளிதில் செரிமானமாவதில்லை என அவர்கள் குறிப்பிடுகின்றனர். பல்வேறு நோய்களால் பீடிக்கப்பட்டு தாய்ப்பால் கொடுக்க வேண்டாம் என மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்ட தாய்மார்கள் நல்ல தரமான குழந்தைகளுக்குரிய பால் பொருட்களை பயன்படுத்த வேண்டும்

Thursday, July 1, 2010

மூளை வளருகிறது???













உனக்கு மூளையே கிடையாதா? என்று யாரையும் திட்டாதீர்கள். எல்லோருக்கும் மூளையிருக்கிறது. அதுமட்டுமின்றி தினமும் மூளை வளருகிறது! ஒவ்வொரு நாளும் புதிதாக குறைந்தது 10,000 நியூரான் செல்கள் (நரம்பு செல்கள்) மூளையில் பிறக்கின்றன. பிறந்த ஒரு சில நாட்களிலேயே அழிந்துவிடுகின்றன. தினமும் புதிதாக நரம்புசெல்கள் பிறந்து உடனே அழிந்து போவதால் என்ன பயன்? மூளை வளருகிறது என்று எப்படி சொல்வது? புதிதாகப் பிறந்த நரம்பு செல்கள் சாகமல் உங்களுக்குப் பணிவிடை செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைத்தீர்களேயானால் அதற்கு தினமும் புதிதாக எதையாவது நீங்கள் கற்றுக் கொள்ளவேண்டும். புதிதாகப் பிறக்கும் மூளை செல்லுக்கு வேலை கொடுக்கவில்லையானால் அது செத்துப்போய்விடும்.


இதுதான் என்றில்லை, எதை வேண்டுமானலும் கற்கலாம்; சீட்டாட்டத்தில் புதிதாக ஒரு டிரிக், செஸ் விளையாட்டில் புதிய மூவ், கித்தார் இசை, புதிதாக ஒரு ராகம், புதிய நாவல், கடினமான ஒரு கணக்கு..... குழந்தை முதல் முதியவர்கள் வரை அனைவரும் தினமும் ஏதாவதொன்றை முயன்று கற்றுக் கொண்டிருந்தால் தினமும் தோன்றும் 10,000 செல்களில் ஒரு சிலவாவது மூளையில் நிலைத்து நிற்கும்.

பாலூட்டி வகையைச் சேர்ந்த உயிரினங்களுக்குப் பிறந்தபோது எந்த அளவு மூளை இருந்ததோ, பெரியவர்களாகும்போது அதே அளவு, அல்லது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து சிறிதாகி விடும் என்றுதான் இதுநாள் வரை பலரும் நினைத்துக் கொண்டிருந்தார்கள். உடம்பில் வேறு எங்கு வேண்டுமானாலும் புதிதாக திசுக்கள் தோன்றினாலும் தோன்றலாம், மூளையில் மட்டும் அது சாத்தியமில்லை என்று 1990 வரை கருதிவந்தனர்.

எலிசபெத் கோல்டு (பெண்மணி) என்பவர் நரம்பு செல்கள் புதிது புதிதாக மூளையில் பிறக்கும் என்பதைக் கண்டுபிடித்தபின் நரம்பியலில் ஏகப்பட்ட ஆய்வுகள் அது தொடர்பாக மேற்கொள்ளப்பட்டன. மூளை வளரந்து கொண்டேபோனால் கபாலம் வெடித்துவிடுமே என்று பயப்படவேண்டாம். மூளையில் காதுக் கதுப்புக்கு உள்ளே இருபுறமும் உள்ள ஹிப்போக் கேம்பஸ் என்ற உறுப்பில்தான் புதிதாக நரம்புசெல்கள் தினமும் தோன்றுகின்றன. 1998 இல் ஸ்வீடனில் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலிருந்து இது எலிகளுக்கு மட்டுமல்ல, மனிதருக்கும் பொருந்தும் என்று தெரிந்தது.


அதெப்படி நரம்பு செல்கள் புதிதாக முளைக்கின்றன என்பதைக் கண்டுபிடிக்கிறார்கள்? ரொம்ப சிம்ப்பிள். புரோமோ டி ஆக்ஸி யூரிடின் (Bromo deoxy uridine—BrdU)) என்ற கெமிக்கலை இரத்தத்தில் செலுத்தினால் எங்கெல்லாம் உடலில் புதிதாக செல்கள் முளைக்கின்றனவோ அந்த இடமெல்லாம் பளிச்சென்று ஒளி விடும். பச்சை நிற ஒளித்திட்டுகள் செல்கள் புதிதாகத் தோன்றியிருப்பதைக் காட்டிக் கொடுத்தவிடும். எலிகளில் சோதனை செய்தபோது ஹிப்போகேம்பஸ் பகுதியில் தினமும் 5000 முதல் 10,000 செல்கள் புதிதாகத் தோன்றுகின்றன என்பது தெரிந்தது.

மார்ரிஸ் வாட்டர் மேஸ் (Morris Water Maze) என்று ஒரு பரிசோதனை. எலியை பால் விட்டு கலக்கிய கலங்கலான தண்ணீர்த் தொட்டியில் தூக்கிப் போட்டுவிடுவார்கள். தொட்டியிலிருந்து வெளியேற அது தத்தளித்து இங்கு மங்கும் நீந்தும். ஓரிடத்தில் பிளாட்பாரம் (மேடை) சட்டென்று புலப்படாமல் மறைந்திருக்கும். ஏதேச்சையாக அதைக் கண்டுபிடித்துவிட்ட எலி அடுத்த இரண்டு மூன்று பரிசோதனையில் அதைக் கற்றுக் கொள்ளும். தொட்டியின் உள்ளே காணப்படும் அடையாளங்களை நினைவில் வைத்துக் கொண்டு ஒரே தாவில் மேடையைக் கண்டுபிடித்துத் தப்பித்தவிடும். எலிகளுக்கு பயம், எச்சரிக்கை, தப்பிக்கும் தந்திரம் போன்ற புதிய அனுபவ அறிவுகளை வழங்கிவிட்டு, மூளையில் ஹிப்போ கேம்ப்பஸில் புதிய நரம்பு செல்களை புதிதாக தோன்றுகின்றனவா என்று எண்ணிப்பார்ப்பார்கள். இதில் பல புதிய தகவல்கள் கிடைத்தன.

தினமும் ஆயிரக்கணக்கான நரம்பு செல்கள் வேர்செல்களிலிருந்து உருவாகி முழுவளர்ச்சியை 14 நாட்களில் அடைகின்றன. இப்படி தினமும் பத்தாயிரம் செல்களாவது முற்றி நினைவுகளைப் பதித்துக்கொள்ள தயாராக நிற்கின்றன. அன்றைய தினம் ஏதாவது நினைவில் பதிய வேண்டியதாக இருந்தால் அதற்காக ஒரு சில செல்கள் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டு மற்றவை உடனே அழிக்கப்படுகின்றன. மறுநாள் இன்னொரு செட் நியூரான்கள் முற்றி தயார் நிலைக்கு வருகின்றன. எத்தனை செல்கள் தொடர்ந்து நீடிக்கின்றன என்பது கற்றுக் கொள்ளும் அனுபவம், அதன் தீவிரம், அவசரம், அவசியம் ஆகியவை பொறுத்து மாறுகின்றது. அதிக சிக்கலான அனுபவங்களுக்கு அதிக செல்கள் தேவைப்படுகின்றன.

எந்த செல்லை அழிப்பது எந்த செல்லை விடுவது என்பதை நிர்ணயிப்பது அந்தந்த செல்களே. நினைவுப் பதிவில் ஈடுபடும் செல்களைத் தவிர மற்றவை அழிந்துவிடுகின்றன. நினைவு ஆக்கத்தில் சம்மந்தப்பட்ட நரம்புசெல்லில் சில மாறுதல்கள் நடைபெறுகின்றன. நரம்பு செல் எப்படியிருக்கும் என்பதைக் கொஞ்சம் தெரிந்து கொள்வோம். நரம்பு செல், நீண்ட காம்புடைய மல்லிகை மொட்டுபோல் இருக்கும். காம்பினை ஆக்ஸான் என்பார்கள். மொட்டுப்பகுதிதான் செல். அதிலிருந்து நிறைய தலை முடிபோல் இழைகள் வெளிப்படும்; அவற்றை டென்ட்ரைட் என்பார்கள். நினைவு ஆக்கத்தில் ஈடுபட்ட செல்லின் ஆக்ஸானின் முனை ஹிப்போக்கேம்பஸின் ஒருபகுதியாகிய CA3 என்று இடத்துடன் தொடர்பு கொண்டுவிடும். டென்ட்ரைட்டுகள் வேறு நரம்பு செல்களுடன் தொடர்பு கொண்டுவிடும். இப்படி தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளாத நரம்பு செல்கள் செத்துவிடுகின்றன.

பரிசோதனையின் மூலம் எலிகளின் மூளையில் நரம்பு செல் உருவாவதைத் தடுத்தால், அவை புதிதாக சொல்லித்தருவதைக் கற்றுக் கொள்வதில்லை. MAM என்று ஒரு கெமிக்கல்; இதை உடலில் செலுத்தினால் புதிய நினைவுகள், அறிவு அனுபவம் எதுவும் பதியாது. இது நேரடியாக நரம்பு செல்கள் வளர்வதைத் தடைசெய்கிறது. எலிகளிடம் சுலபமாக இப்படி சோதனை செய்யயலாம். மனிதர்களிடம் இது சாத்தியமில்லை, இருந்தாலும் எதிர்பாரதவிதமாக சிலவாய்ப்புகள் கிடைப்பதுண்டு, மூளையில் கேன்ஸர் ஏற்பட்டவர்களுக்கு "கீமோதெராப்பி" (Chemotherepy) என்று ஒரு சிகிச்சை செய்வார்கள், வீரியமிக்க கெமிக்கல் கேன்ஸர் செல்கள் வளருவதைத் தடைசெய்யும். ஹிப்போக்கேம்பஸிலும் செல்வளர்ச்சி தடை ஏற்படுவதால், சில பரிசோதனைகளை இந்நோயளிகளிடமும் செய்து பார்க்க முடிகிறது. இதை கீமோபிரெய்ன் (Chemo brain) என்பார்கள். சிலரிடம் அல்ஷெய்மர் என்ற நரம்பு செல் நோய் இருக்கும். ஹிப்போகேம்பஸில் பாதிப்பு ஏற்படும்போது அவர்களுக்கு நினைவுகள் மறப்பதும் புதிதாக எதையும் கற்றுக் கொள்ளமுடியாதிருப்பதும் தெரிகிறது.


முதுமை வரும்போதே கூடவே மறதியும், மந்த புத்தியும் வந்துவிடும். அவை வராமல் தடுக்க வேண்டுமாயின் அன்பர்களே தினமும் எதையாவது படியுங்கள், ஏரோபிக் உடற்பயிற்சி செய்யுங்கள், நண்பர்களுடன் பொழுது போக்குங்கள். செய்யக்கூடாதவை சிகரெட் பிடிப்பது, குடிப்பது, செய்யவேண்டியது உடற்பயிற்சி, பழங்கள் சாப்பிடுவது, புதிதாக கற்பது. ஆன்ட்டி டிப்ரசன்ட் மாத்திரைகள்கூட நரம்புசெல் நிலைப்பாட்டை அதிகரிக்கிறதாம்.

இந்தக் கட்டுரையைப் படித்தீர்கள் அல்லவா. இன்றைக்கு குறைந்தது நூறு நரம்புசெல்களாவது உங்களுக்குப் புதிதாகக் கிடைத்திருக்கும் அதற்கு நான் கியாரண்ட்டி!