Saturday, June 26, 2010

சந்திரயானின் நிலவுப் பயணமும் நிலவில் நீர் கண்டுபிடிப்பும்












மனிதன் சிந்தனை சக்தி பெற்று தான் பிறந்த மண்ணையும்தனக்கு மேலுள்ள விண்ணையும் ஆராயத் தொடங்கிய நாள் முதல் நிலவு மனித எண்ணங்களை வசீகரித்து உள்ளது. கைக்கு எட்டும் தூரத்தில் இருப்பது போலத் தோன்றினாலும், கடந்த நூற்றாண்டில் தோன்றிய விண்வெளி யுகம் வருவதற்கு முன்பு வரை நிலவினப் பற்றி நமக்கு அதிகமாகத் தெரிந்திருக்கவில்லை. தொலைநோக்கிகள் மூலம் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் செயற்கைக்கோள் தொழில்நுட்பம் வந்த பிறகே நிலவினப் பற்றிய உண்மைகளும் பலப்பல புதிய தகவல்களும் நமக்குக் கிடைக்கப் பெற்றன.
சென்ற நுற்றாண்டின் முதல் பகுதியில் நடைபெற்ற இரண்டு உலகப்போர்கள் உலகின் பரிமாணத்தை வெகுவாக மாற்றி அமைத்தன. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சிக்கு இவை அடிகோலின. இரண்டாம் உலகப்போருக்குப் பின் அமெரிக்காவும் சோவியத் ரஷ்யாவும் ஜெர்மனியில் இருந்த அறிவியலாளர்களை தங்கள் பால் ஈர்த்து அவர்களுக்கு அடைக்கலம் தரும் நோக்கில் தங்கள் நாட்டுக்கு அழைத்துச் சென்றன. அப்படி அமெரிக்காவுடன் சென்ற குழுவில் முக்கியமானவர் வெர்னர் வான் ப்ரான் என்ற வானவூர்தி பொறியியலாளர். விண்வெளி யுகத்தில் விண்செலுத்தி (ராக்கெட்) ஆராய்ச்சிக்கும், வடிவமைப்பிற்கும், செயலாக்கத்திற்கும் முக்கியமானவராகத் திகழ்ந்தார்.
இரண்டாம் உலகப்போருக்குப் அமெரிக்காவுக்கும் சோவியத் ரஷ்யாவுக்கும் இடையில் பனிப்போர் ஆரம்பித்த போது, விண்வெளி ஆராய்ச்சியும் இதன் ஒரு பங்காக சூடு பிடித்தது. வானவூர்தி மற்றும் விண்வெளி ஆராய்ச்சிக்கு அப்போது அடிக்கோல்கள் நாட்டப்பட்டன.
ஐம்பதுகளின் பிற்பகுதியில் ரஷ்யா ஸ்புட்னிக் என்ற கால்பந்து அளவுள்ள செயற்கைக் கோளை விண்ணில் ஏவி மனித இனத்திற்கு ஒரு புதிய திசையைக் காட்டியது. அதன் தொடர்ச்சியாக லூன எனப்படும் செயற்கைக் கோள்கள் தொடரை வரிசையாக ஏவி நிலவுப் பயணத்திற்குக் வெற்றிகரமாக அடிக்கல் நாட்டியது.
பனிப்போரின் இந்த முக்கிய நிகழ்வினை மீரும் விதத்தில் அறுபதுகளின் ஆரம்பத்தில் அமெரிக்க ஜனாதிபத்ய் ஜான் கென்னடி ஒரு அறிக்கையை வெளியிட்டார். அறுபதுகள் முடிவதற்கு முன்பாக மனிதனை நிலவின் தரையில் கால் வைக்கச் செய்யப் போவதாக அவர் திட்டவட்டமாக அறிவித்தார். அமெரிக்காவின் நாசா என்ற விண்வெளிக் கழகம் கென்னடியின் வார்த்தைகளை செயல்படுத்தியது. ஜூலை 29, 1969ம் நாள் மனித இன வரலாற்றில் ஒரு மகோன்னதமான தினமாக உருவானது. ஆம்ஸ்ட்ராங்க், ஆல்ட்ரின் என்ற இரு அமெரிக்க விண்வெளி வீரர்கள் அபொல்லோ-11ந் ஈகிள் விண்கலத்தின் உதவியுடன் நிலவில் தரையிறங்கி மிகப்பெரிய சாதனை படைத்தனர்.
இங்கே இந்திய மண்ணில் ஆங்கிலேய ஆதிக்கத்தில் இருந்து மீண்டு அப்போது நாம் சுதந்திரக் காற்றை சுவாசிக்க ஆரம்பித்திருந்த நேரம். சோவியத் ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இணையாக விண்வெளி சார்ந்த தொழில்நுட்ப வளர்ச்சியை நமது நாட்டிற்கும் கொண்டு வர இயலும் என்ற ஒரு சிறு நம்பிக்கைத் துளிர் நம்மிடையே வேர் விட்டு பரவ ஆரம்பித்திருந்தது. விண்வெளி தொழில்நுட்பம் பற்றிய நமது எண்ணங்களில் தெளிவு இருந்தது. நமது மக்கலின் வாழ்க்கைத் தரத்தை உயர்துவதற்கு மட்டுமே நாம் இந்த தொழில்நுட்பத்தை நாடுகிறோம் என்பதிலும், மற்ற நாடுகளுடன் போட்டியிடும் எண்ணத்தில் நமது பாதையை நாம் அமைத்துக்கொள்ளப் போவதில்லை என்பதிலும் நாம் உறுதியாக இருந்தோம்.
அறுபதுகளில் தொடங்கி தொண்ணூறுகளின் இறுதியில் நாம் செயற்கைக் கோள் தொழிநுட்பத்திலும் அவற்றை விண்ணில் ஏவும் விண்செலுத்தி தொழிநுட்பத்திலும் தன்னிறைவு அடைந்தோம். தொலைத்தொடர்பு விஸ்த்தரிப்பு, இயற்கை வளங்கள் மேலாண்மை போன்ற அத்யாவசியங்களை விண்வெளி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டின் மூலம் கொண்டு வந்து நாம் மக்களின் அன்றாட வாழ்க்கை முன்னேற்றம் அடைந்ததைக் கண்டோம்.
இதன் தொடர்ச்சியாக நம்மிடையே ஒரு சிந்தனை தலை தூக்கியது.எழுபதுகளில் சோவியத் ரஷ்யாவும் அமெரிக்காவும் நிலவை நோக்கி வத்திருந்த பார்வையை நாம் மேலும் கூர்மையாக்க இயலும் என்ற தன்னம்பிக்கை நம்மிடையே உருவானது. இதனை பனிப்போருக்காகவோ, பயன்பாடற்ற பகட்டுக்காவோ இன்றி மனித இனத்தின் முன்னோக்கிய நூற்றாண்டுகளை சற்றே தூக்கி நிறுத்தும் முயற்சியாகப் பார்த்தோம்.
அப்போது பிறந்தது சந்திரயான்-1 செயற்கைக் கோள் திட்டம்.
சோவியத் ரஷ்யா தந்து லூனா என்ற தானியங்கி எந்திர செயற்கைக் கோள்கள் மூலமும், அமெரிக்கா தனது அபொல்லோ விண்திட்டத்தின் மூலமும் நிலவின் பல பகுதிகளை ஆராய்ந்து பல முக்கிய முடிவுகளை வெளியிட்டிருந்தனர். நிலவின் கனிம வளங்கள், தரை அமைப்பு, தட்ப வெப்பம், மின்காந்த சூழ்நிலை போன்ற முக்கியமான இயற்பியல் மற்றும் வேதியியல் கூறுகளை ஆராய்ந்து நிலவின் செழிப்பற்ற தன்மையையும் அதன் கடந்த காலத்தின் பிம்பங்களையும் காட்ட முயன்றனர். மனித கண்களுக்கு என்றுமே காட்சியளிக்காத நிலவின் மறுபக்கத்தையும் படம் பிடித்து நம் பார்வைக்குக் கொண்டு வந்தனர்.
அதுவரை பூமியின் தரையிலிருந்தே நிலவைப் பார்த்துப் பழகியிருந்த மனித சிந்தனைக்கு இவை பெரும் அறிவியல், தொழிநுட்ப புரட்சியாக அமைந்தது.
எனினும் இவை ஆரம்ப கால முயற்சிகள் என்பதால் முழுமை பெறவில்லை. நிலவில் தரையிறங்கிய இடங்கள் விண்வெளி வீரர்கள் மற்றும் விண்கலங்களின் பாதுகாப்பையே முக்கியமாகக் கருதி தேர்ந்தெடுக்கப்பட்டன. எனவே நிலவின் அந்தப் பகுதிகள் மட்டுமே அறிவியல் தேடலில் ஓஎரளவு முழுமை பெற்றதாக இருந்தது. ந்லவின் மற்ற தரைப்பகுதிகள், அதிலும் குறிப்பாக வட மற்றும் தென் துருவப் பகுதிகள், பற்றிய ஆய்வு பெரும்பாலும் குறைந்த அளவிலேயே இருந்து வந்தது. அத்துடன் , மிக முக்கியம்மக, நிலவில் நீர் உண்டா, இல்லை நீர் அமையக்கூடிய சாத்தியக்கூறுகள் எண்டா என்ற கேள்விக்கு இந்த ஆய்வுகள்லின் மூலம் திட்டவட்டமாக அறிய இயலவில்லை. நிலவில் உயிரினங்கள் தோன்றுவது அசாத்தியம் என்பதும், நீரும் காற்றும் பெரும்பாலும் இல்லாத காரணத்தால் மனித இனம் அங்கே சென்று உயிர் வாழ்வது மிகவும் கடினம் என்பதும் பரவலான கருத்தாக உருவானது.
எனவே நிலவப் பற்றி இதுவரை அறியப்பட்ட விவரங்களை அடிக்கோடாகக் கொண்டு நிலவின் முழு தரைமட்டத்தையும் ஆய்வு செய்து பல்வேறு தரப்பட்ட தகவல்கள் சேகரிப்பது என்பது சந்திரயான்-1 செயற்கை கோளின் செயல்திட்டத்தின் அடிப்படைக் குறிக்கோளாக உருவானது.
நிலவின் முழு தரைப் பரப்பையும் முப்பரிமாண புகைப்படம் எடுப்பது, கனிம மற்றும் வேதியியல் கூறுகளின் பரவல் தன்மையை ஆரைய்ந்து வரைபடம் உருவக்குவது, அதுவரை ஆய்வு செய்யப்படாத நிலவின் நிழ்ல் பகுதிகளில் ஆய்வு மேற்கொள்வது, நீர் உள்ளதா அல்லது நீர் அமையும் சாத்தியக்கூற்கள் உள்ளத என்பதை அறிவது, நிலவின் காந்த சக்தி மற்றும் அணுக்கதிரியக்கத் தன்மைகளைக் கண்டறிவது ஆகியவை சந்திரயான்-1 திட்டத்தின் செயல்முறை முடிவுகளாக அமைந்தன.
சந்திரயான்-1 செயல்திட்டம் பல அசாத்திய நிகழ்வுகளை தன்னகத்தே கொண்டுள்ளது. நம் நாட்டிலே உள்ள பல்வேறு ஆராய்ச்சிக் கூடங்களில் வடிவமைக்கப்பட்ட ஐந்து அறிவியல் கருவிகளும் சந்திரயான்-1 செயற்கை கோளில் இடம் பெற்றன. அத்துடன் அதுவரை இல்லாத முறையில் உலகின் பல நாடுகளீல் இருந்தும் ஆய்வுக்கூடக் கருவிகளை சந்திரயான்-1 செயற்கை கோள் சுமந்து சென்றுள்ளது. அமெரிக்காவில் இருந்து 2 கருவிகள், ஐரோப்பவில் இருந்து 3 கருவிகள், பல்கேரியாவில் இருந்து ஒரு கருவி என ஆறு அறிவியல் நோக்கிலான அயல்நாட்டு கருவிகளுக்கு தாங்குமேடையாக சந்திரயான்-1 திகழ்ந்தது. ஐரோப்பிய கருவிகள் இரண்டில் நமது பணி சரிசமமாக இருந்தது. இந்தப் பதினோரு அறிவியல் கருவிகளூம் மேலே சொல்லப்பட்ட சந்திரயான்-1 செயல்திட்டத்தின் அடிப்படைக் குறிக்கோள்களை ஒன்றுக்கொன்று முரண்பாடற்ற வகையில் அதற்கு மாறாக ஒத்துப் போகும் தன்மைகள் உடையனவாக வடிவமைக்கப்பட்டு சந்திரயான்-1 செயற்கைக் கோளால் உயிரூட்டம் பெற்றன.
இந்தக் கருவிகள் மேலும் பல புதிய நிகழ்வுகளை நிலவின் அருகில் சென்று ஆராய்ந்து தகவல் சேகரிக்கும் தன்மைகளை உள்ளடக்கியனவாக வடிவமைக்கப்பட்டன. உதாரணமாக, ‘நிலவின் தரையில் மோதி உணரும் கருவியான தன்னகதே ஒரு நிழல்பட கருவியையும், உயரம் உணர் கருவியையும், ஒளிக்கதிர்களை பகிர்ந்து ஆராயும் பகுப்புமானியையும் உள்ளடக்கியிருந்தது. இதன்மூலம் சந்திரயான்-1 செயற்கைக் கோளை விட்டு நிலவை நோக்கி பாய்ந்து செல்கையில் நிலவின் துல்லியமான வாயு மண்டலத்தை கணிக்கவும்,எதிர்காலத்தில் சுமுகமாக நிலவில் தரையிறங்குவதற்குத் தேவையான செயல்முறைகள் மற்றும் அளவைகளையும் கண்டுணர்ந்து பூமிக்கு தகவல் கொடுக்கும் சிறப்பம்சங்களுடன் இந்தக் கருவி விளங்கியது. இதனைப் போன்றே பதினோறு கருவுகளும் ஒவ்வொரு புதிய ஆரய்ச்சியில் ஈடுபட்டு நிலவின் பல்வேறு தன்மைகளை கண்டுணர்வதற்கு ஏதுவாக வடிவமைக்கப்பட்டிருந்தன.
அக்டோபர் 22, 2008 அன்று PSLV விண்செலுத்தி மூலம் ஏவப்பட்ட சந்திரயான்-1 செயற்கைக் கோள் நவம்பர் 8ந் தேதி நிலவின் சுற்றுப்பாதையை வெற்றிகரமாக சென்றடைந்தது. ஏறக்குறைய மூன்றே முக்கால் லட்சம் கிலோமீட்டர் தொலைவான இந்த நெடிய பயணத்திற்கு என வடிவமைக்கப்பட்ட சந்திரயானின் LAM எனப்படும் திரவ எரிபொருள் கொண்ட தொலைதூர இயக்கத்திற்கு பயன்படும் எந்திரம் எந்தவித சிக்கலும் இன்றி செயல்பட்டது. விண்செலுத்தி மூலம் விண்ணில் ஏவப்படுவது, பூமியின் சுற்றுப்பாதையில் இருந்து நிலவின் சுற்றுப்பாதையை சென்றடைவது, அதன் பின்னர் நிலவின் சுற்றுப்பாதையில் நுழைந்து நிலவுக்கு சுமார் நூறு கிலோமீட்டர் உயரத்தில் நிலவினை சுற்றி வருவது ஆகிய முக்கியமான செயல்திட்டங்கள் நொடிபொழுது அளவும் கூட பிசகின்றி கச்சிதமாக செயல்படுத்தப்பட்டன.
சந்திரயான்-1 செயற்கைக் கோள் நிலவின் குறுகிய சுற்றுப் பாடதையை வெற்றிகரமாக அடைந்து சுற்றி வர ஆரம்பித்ததும், அதனில் பொருத்தப்பட்டிருந்த பதினோரு அறிவியல் நோக்கிலான கருவிகளும் வெற்றிகரமாகக இயக்கப்பட்டு அவை நிலவின் பல்வேறு தன்மைகளை ஆராய்ந்து பூமிக்கு தகவல்கள் தர ஆரம்பித்தன.
நிலவில் நீர் கண்டுபிடிப்பு: நீர் இன்றி அமையாது உலகு என்பது நமது தெய்வப்புலவர் திருவள்ளுவரின் வாக்கு. நமது உலகில் உயிரினங்கள் தோன்ற முக்கியமான காரணிகளுள் நீர் பிரதானமாகும். ந்மது பூமியில் முதன்முதலில் தோன்றியவை கடல்வாழ் உயிரினங்களே என்பது உயிரியல் அறிவியலாளர்களின் ஒரு முக்கியமான கண்டுபிடிப்பாகும். இவ்வாறு கடலில் தோன்றுவதற்கு காரணம் பூமி தோன்றிய ஆரம்பக் காலங்களில் பிராணவாயு பெருமளவில் கடல்நீரில் இருந்தனால் எனலாம்.
உயிர் அணுக்கள் வளர்வதற்கும் அவற்றினுள் நடைபெறும் பல்வேறு இயக்கங்கள் சரியான முறையில் இருக்கவும் தேவையான சக்தி பிராணவாயு மூலம் பெறப்படுகின்றது. இந்தப் பிராணவாயு உடல்பூரவும் சென்றடைய உதவுவது நமது இரத்த ஓட்டம். இரத்த ஓட்டத்திற்கு மிகவும் இன்றியமையாதது நீர் ஆகும். எனவே நமது சூரியக் குடும்பத்திலோ அல்லது அதற்கு அப்பாற்பட்ட வேறு கிரகங்களிலோ உயிர்வகைகள் இருக்குமாயின் அவை நீரைச் சார்ந்ததாகவே இருக்கும் என்பது நமது நம்பிக்கை.
பூமி தோன்றி சுமார் ஒரு பில்லியன் வருடங்களுக்குப் பிறகே முதல் உயிரணுக்கள் இங்கே தோன்றியிருக்கலாம் என்பது ஒரு முக்கியமான கணிப்பு. சூரியக் குடும்பத்தில் நமது பூமியைத்தவிர வேறு எந்த கிரகத்திலும் உயிர்வகைகள் இல்லை என்பது அறிவியல் வகையிலான நமது யூகம். சரியான மூலக்கூறுகள், சரியான சூழ்நிலை, சரியான தட்பவெப்பம், மூலக்கூறுகளின் சரியான கலவை அளவுகள் ஆகிய நான்கு முக்கியமான காரணிகளும் சேர்ந்து இந்த பூமியில் முதன்முதலாக உயிரணுக்கள் தோன்ற வழி வகுத்துள்ளன.
நிலவில் உயிரணுக்கள் உள்ளனவா, இல்லை அமைவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா என நாம் அறிய முற்படுகையில் மேலே சொன்ன பூமியின் சரித்திரம் நமக்குக் கை கொடுக்கிறது. தற்போது உள்ள கால கட்டத்தில் நிலவு நாம் மேலே கண்ட நான்கு காரணிகளைக் கொண்டு ஏதோ ஒரு தோற்றத்தில் இருக்கலாம். சந்திரயானுக்கு முன்னே சென்ற செயற்கைக் கோள்கள் நிலவில் உயிரினங்கள் பெரும்பாலும் இல்லை என்ற கருத்தை நிலை நிறுத்தியுள்ளன. அப்படியானால் அங்கே குறைந்தபட்சம் நீர் உண்டா அல்லது நீர் அமையும் சாத்தியக்கூறுகள் உண்டா என்பதை அறிய வேண்டியது முக்கியமாகிறது. அப்படி இருக்குக் பட்சத்தில் ஒரு செல் உயிரணுக்கள் கொண்ட அமீபா போன்ற உயிரினங்கள் நிலவின் துருவ பிரதேசங்களில் தோன்றியிருக்கலாமோ என்ற வினா எழுகிறது. இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம், என்பதே இன்றைய நிலையாக உள்ளது.
நிலவில் உயிரணுக்கள் தோன்ற அல்லது ஏற்கெனவே தோன்றியிருக்க வேண்டுமானால் அல்லது தோன்றக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்க வேண்டுமானால் அதனை மறைமுகமாக அறிந்து கொள்வது சுலபமாக அமையும்.. காரணம் என்னவென்றால் நிலவில் உயிரினங்கள் இருக்கின்றனவா, இல்லையா என்பதை நேரடியாகச் சென்றோ அல்லது தொலை-இயக்கி செயல்திட்டங்கள் மூலமோ ஆரய்வது ஒரு குறிப்பிட்ட அளவுக்கே சாத்தியமாகும். இதனையே அமெரிக்கர்களும் ரஷ்யர்களும் செய்துள்ளார்கள். ஆனால் நிலவின் முழுப் பகுதிகளையும் அவ்வாறு ஆராய வேண்டுமென்றால் அது மிக மிகக் கடினமானது மட்டுமன்றி இந்த காலகட்டத்திற்கு அவசியமற்றதும் கூட. மாறாக மறைமுக காரணிகள் இருப்பதையோ, இல்லாததையோ கண்டறிந்தோமானால் நமது கேள்விக்கு விடைகள் தாமக வரும், கடலில் இருக்கும் கப்பல்கள் கலங்கரை விளக்கம் இருந்தால் நிலப்பரப்பு அருகில் உள்ளது என்பதை உணர்வது போல.
இந்த முறையில் நிலவில் நீர் உள்ளதா அல்லது நீரின் மூலக்கூறுகள் உள்ளனவா அல்லது அவை அமையும் சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்று அறிந்தோமானால் அங்கே சிறிய உயிரினங்களேனும் உள்ளனவா, இல்லை தோன்றக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்ற நமது கேள்விக்கு விடை கண்பது எளிது. இதனையே சந்திரயான்-1 செய்துள்ளது.
மேலே சொன்ன கேள்விகளுக்கு பதில் காணும் பொருட்டு சந்திரயான்-1’ல் பொருத்தப்பட்ட ‘நிலவின் கனிம வளம் காணும்’ (Moon Mineralogy Mapper) கருவி செயற்கைக் கோள் நிலவின் சுற்றுப்பதையை அடைந்தவுடன் மற்ற் கருவிகளைப்போல் நன்கு இயங்கத் தொடங்கியது. இது மின்காந்த அலைவரிசை தொகுப்பில் கண்ணுக்குப் புலப்படும் கதிர்வீச்சு அலைவரிசைகளிலும், இளஞ்சிவப்பு அலைவரிசைகளிலும் நிலவின் தரைமட்டத்தில் இருந்து பெறப்படும் உறிஞ்சப்பட்ட மற்றும் உமிழப்பட்ட கதிர்களைக் கண்டறியும் திறன் வாய்ந்தது.
நிலவின் தரைமட்டத்தில் 1 முதல் 2 மில்லி மீட்டர் கனத்திலுள்ள மண்ணில் பரவிக்கிடக்கும் பிளேச்சியோகிளாஸ் மற்றும் பைராக்சின் எனப்படும் துகள்களினூடே சூரிய அலைக்கதிர்கள் பட்டுச் செல்லும்போது ஒளிக்கதிர்கள் உறிஞ்சுதல் ஏற்படுகின்றது. அதன்பின்னர் இந்தக் கதிர்கள் பட்டுத் தெறித்து பின்னோக்கி உமிழப்படும் போது அலைக்கதிர்களிடையே இந்த உறிஞ்சப்பட்ட கதிர்களின் விவரங்கள் அடங்கியிருக்கும்.
நிலவின் தரைமட்டத்தில் நீரோ அல்லது நீரின் மூலக்கூறுகளான ஹைட்ராக்சில் மற்றும் ஹைட்ரஜன் ஆகிய தனித்தியங்கும் அணுக்குழுமங்களோ இருக்கும் பட்சத்தில் சூரியனில் இருந்து வந்து நிலவில் பட்டுத் தெறிக்கும் ஒளிக்கதிர்களில் அவற்றின் அத்தாட்சிகள் பதிந்திருக்கும். அதாவது இந்த அணுக்குழுமங்கள் சூரிய ஒளிக்கதிர்களில் உள்ள மூன்று மைக்ரோ மீட்டர் அலைவரிசையிலுள்ள கதிர்களை உறிஞ்சிய பின்னர் மீதி இருக்கும் கதிர்களைத் தெறித்துவிடும். இப்படி பின்னோக்கி தெறிக்கப்பட்டு வரும் ஒளிக்கதிர்களை தகுந்த முறையில் சேகரித்து ஆராய்ந்து பார்த்தோமானால் உறிஞ்சப்பட்ட மற்றும் உமிழப்பட்ட கதிர்கள் தொகுப்பிலிருந்து நிலவில் நீர் உண்டா இல்லை அதன் மூலக்கூறுகள் உண்டா என்பதை கணித்துவிடலாம்.
நிலவின் தரைமட்டம் முழுதுமாக சூரிய வெளிச்சத்தில் மூழ்குவது இல்லை. குறிப்பாக துருவப்பகுதிகளில் ஒளிக்கதிர்கள் சென்றடைவதில்லை. ஆகையால் சூரியக்கதிர்கள் நிலவில் படும் இடங்களில் நிலவின் கனிம வளம் காணும் கருவி மூலம் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. மேலே கூறப்பட்ட உறிஞ்சப்பட்ட மற்றும் உமிழப்பட்ட ஒளிக்கதிர்களை சேகரித்து ஆராயும் முறை கையாளப்பட்டது.
கதிர் அலைவரிசை தொகுப்பில் மூன்று மைக்ரோ மீட்டர் அலைவரிசையிலுள்ள கதிர்கள் உறிஞ்சப்படுதல் நிலவின் பல இடங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல் தொகுப்புகளில் காணப்பட்டது. இதிலிருந்து ஏறக்குறைய நிலவின் எல்லாப் பகுதிகளிலும் நீர் இருப்பதற்கு ஆதாரமான ஹைட்ராக்சில் மற்றும் ஹைட்ரஜன் மூலக்கூறுகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அது மட்டுமன்றி நீர் உருவாவதற்கான செயல்முறைகள் சிறிய அளவில் பரவலாக நிலவின் பரப்பில் ஏகமாக நடந்து கொண்டிருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இத்துடன் இந்த மூன்று மைக்ரோ மீட்டர் அலைவரிசையிலுள்ள கதிர்கள் உறிஞ்சப்படுதல் செய்கையானது சூரியக்கதிர்கள் நிலவின் தரைமட்டதில் விழும் கோணத்தைப் பொறுத்தது என்பதும், துருவப் பகுதிகளை நோக்கிச் செல்கையில் இது அதிகமாக உள்ளது என்பதும், தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ப மாறுபடுகின்றது என்பதும் பெறப்பட்ட தகவல் திரட்டின் ஆய்விலிருந்து தெளிவாகி உள்ளது.
இவ்வாறாக நிலவின் தரைமட்டத்தில் இதுவரை நிலவின் கனிம வளம் காணும் கருவி ஆய்வு நடத்திய பெரும்பாலான பகுதிகளில் நீரின் மூலக்கூறுகள் வடிவில் நீரின் இருப்பு உள்ளது தெளிவாகியுள்ளது.
இந்த நூற்றாண்டில் இது ஒரு மிகப் பெரிய கண்டுபிடிப்பு என்பது அறிவியலாளர்களின் கணிப்பாகும்.
மேற்கண்ட கண்டுபிடிப்பை சந்திரயான்-1 செயற்கைக் கோள் சுமந்து சென்ற மற்றொரு கருவியான சிறிய செயற்கைப் பாவை கொண்ட வானொலி அலைக்கதிர் கண்டுணரும்’ கருவியும் (miniSAR) உறுதி செய்துள்ளது. இந்தக் கருவியானது வானொலி அலைகளை நிலவின் துருவப் பகுதிகளை நோக்கிச் செலுத்தி அவற்றை திரும்பப் பெற்று, அதனில்
ஏற்பட்டுள்ள முனைப்படு மாறுதல் (Polarisation) மூலம் அங்கே பனிக்கட்டிகள் மற்றும் ஹைட்ரஜன் மூலக்கூறுகள் இருப்பதை உறுதி செய்துள்ளது.
முடிவுரை: இப்படியாக சந்திரயான்-1 செயற்கைக் கோள் மிகப்பெரிய வெற்றிகளைத் தந்துள்ளது. முதன் முறையாக மூன்றே முக்கால் லட்சம் கிலோமீட்டருக்கு மேலாக பயணம் செய்த முதல் இந்திய செயற்கைக் கோள் என்பதும், பதினோரு அறிவியல் கருவிகளை சுமந்து சென்று வெற்றிகரமாக அவற்றை இயக்கி பல அறிவியல் பயன்களைத் தந்துள்ளது என்பதும், பல வெளிநாட்டுக் கருவிகள ஏற்று நிலவுக்குச் சுமந்து சென்றதால் ஸ்ரவதேச பப்களிப்புக்கும் ஒற்றுமைக்கும் வழிவகுத்துள்ளது என்பதும், இதே வகையைச் சேர்ந்த அயல்நாட்டுச் செயற்கைக் கோள்களுடன் ஒப்பிடுகையில் பாதிக்கும் குறைவான தயாரிப்புச் செலவில் மொத்த திட்டமும் அடங்கியுள்ளது என்பதும் ஆகிய பெருமைகள் சந்திரயான்-1 செயற்கைக் கோள் மூலமாக நமது நாட்டிற்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றிகள் என்றால் அது மிகையாகாது.



முனைவர் மயில்சாமி அண்ணாதுரை -
திட்ட இயக்குநர், சந்திரயான்-1&2.

No comments:

Post a Comment