Thursday, October 13, 2011

வேர்


யோக்கா என்பவர் ஜென் ஞானி. அவரிடம் பல சிஷ்யர்கள் பாடம் பயின்றுவந்தார்கள்.

ஒருநாள், பெரிய வியாபாரி ஒருவன் யோக்காவைப் பார்க்க வந்தான். ‘நான் உங்களிடம் சீடனாகச் சேரவேண்டும்’ என்றான்.

யோக்கா அவனை மேலும் கீழும் பார்த்தார். ‘நீ பெரிய பகட்டுக்காரனாக இருக்கிறாயே. எங்கள் ஆசிரமத்தின் எளிமையான வாழ்க்கைமுறை உனக்கு

ஒத்துவருமா? எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு எளிய துறவியாக வாழ்வது என்பது மிகவும் கடினமான விஷயம். அது உன்னால் முடியுமா?’ என்றார்.

’நிச்சயமாக’ என்றான் அவன். ‘நான் இன்றைக்கே இந்தப் பட்டுத் துணிகளைத் தூக்கி எறிந்துவிட்டுக் கைத்தறித் துணிகளைக் கட்டிக்கொள்கிறேன். எளிமையாகச்

சாப்பிட்டுப் பழகுகிறேன். என்னுடைய சொத்துகளையெல்லாம் தர்மத்துக்கு எழுதிவைத்துவிடுகிறேன். நீங்கள் எதிர்பார்க்கும்படி நடந்துகொள்கிறேன். எனக்கு

ஞானம்மட்டும் கிடைத்தால் போதும்!’

அப்போதும் யோக்காவுக்கு முழுத் திருப்தி வரவில்லை. ‘பார்க்கலாம்!’ என்றார். ‘நான் உன்னைச் சில நாள்கள் கவனித்துப் பார்த்து முடிவு செய்கிறேன்!’

அன்று தொடங்கி அந்த வியாபாரி அவருடைய ஆசிரமத்திலேயே தங்கினான். அவன் சொன்னபடி மிகவும் எளிமையானமுறையில் வாழத் தொடங்கினான்.

பத்து நாள் கழித்து யோக்கா அவனை அழைத்தார். ‘தம்பி, உனக்கு இந்த ஆசிரம வாழ்க்கை சரிப்படாது. நீ வீட்டுக்குப் போகலாம்!’ என்றார்.

‘என்ன குருவே இப்படிச் சொல்லிவிட்டீர்கள்? நான் உங்களுக்காகப் பணத்தைத் துறந்தேன், சொத்துசுகத்தையெல்லாம் துறந்தேன், வசதியான வாழ்க்கையைத்

துறந்தேன். இது போதாதா?’

யோக்கா சிரித்தார். ‘நான் வேரை அறுக்கச் சொன்னேன். நீ சில கிளைகளையும் இலைகளையும் கத்தரித்துவிட்டு அதைப்பற்றிப் பெருமை

பேசிக்கொண்டிருக்கிறாய்!’ என்றார்.

No comments:

Post a Comment